இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி, குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் வரும் பிப்ரவரி 7-ம் தேதி ஜீத் அதானி மற்றும் டிவா ஷா ஆகியோரின் திருமணத்தை நடத்த உள்ளார். அம்பானி வீட்டு திருமணம் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக நடந்த நிலையில் அதானி வீட்டு திருமணமும் படு மாஸ்ஸாக நடக்கும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜீத் அதானி மற்றும் டிவா ஷா திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில், சமூக அக்கறையுடன் நடைபெறவுள்ளது. நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் மட்டுமே இந்த திருமணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஜீத் அதானி மற்றும் டிவா ஷா தனக்கு விருப்பமானவர்களையும், தான் முக்கியம் என்ற நினைப்பவர்களையும் நேரில் சென்று திருமணத்திற்கு ஜோடியாக சென்று அழைத்து வருகின்றனர். இப்படி அழைக்கும் ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது மட்டும் அல்லாமல் அதிகளவிலான மக்களை கவர்ந்துள்ளது.
கடந்த வாரம் கௌதம் அதானி பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து திருமண நாளை அறிவித்தார். இதோடு டெய்லர் ஸ்விஃப்ட், டிராவிஸ் ஸ்காட் போன்ற அமெரிக்க நட்சத்திரங்களின் நிகழ்ச்சிகள், ஆடம்பர உணவு விருந்து போன்ற எதுவும் இல்லை என்று கூறி வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்தார். இதை தொடர்ந்து ஜீத் அதானி மற்றும் டிவா ஷா ஆகியோர் பத்திரிக்கை கொடுக்கும் பணிகளை துவங்கியுள்ளது.
தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், ஜீத் அதானி மற்றும் டிவா ஷா, பிரபலமான மிட்டி கேஃபின் நிறுவனர் அலினா அலாம் மற்றும் அவரது ஊழியர்களை தங்கள் திருமணத்திற்கு தனிப்பட்ட முறையில் அழைத்துள்ளனர். இந்த ஹோட்டல் அப்படி என்ன ஸ்பெஷல்..?
மிட்டி கேஃப் என்பது இந்தியா முழுவதும் கிளைகள் கொண்ட ஒரு சமூக அக்கறை கொண்ட நிறுவனமாகும். இந்த கஃபே உடல், மன மற்றும் உளவியல் ரீதியான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும், குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. இதனாலேயே இந்த மிட்டி கேஃப-வுக்கு மக்கள் மத்தியில் பெரும் மதிப்பு உள்ளது.
இந்த நிலையில் தான் ஜீத் அதானி மற்றும் டிவா ஷா, மிட்டி கேஃப் குழுவினருடன் பேசி, சிரித்து திருமணத்திற்கு அழைத்த வீடியோ டிரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications