அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கு சொந்தமான சொகுசு கப்பலில் சுங்க துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். கரீபியன் தீவில் இருக்கும் செயிண்ட் பாரிஸ் பகுதியில் ஜெஃப் பெசோஸின் கப்பல் நின்று கொண்டிருந்த போது இந்த சோதனை நடந்துள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். இவர் 251 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்போடு உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். எலான் மஸ்கிற்கு பிறகு 200 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை கடந்த இரண்டாவது நபர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

ஜெஃப் பெசோஸ் தனக்கு சொந்தமாக 500 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 4000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு கப்பலை சொந்தமாக வைத்திருக்கிறார். கொரு என பெயரிடப்பட்ட இந்த சொகுசு கப்பலில் அவ்வப்போது அவரும், அவருடைய கேர்ள்பிரெண்ட் லாரென் சான்செஸ் ஆகிய இருவரும் பொழுதை கழிப்பார்கள்.
இந்த நிலையில் திடீரென புத்தாண்டுக்கு முந்தைய நாள் சுங்கத் துறையை சேர்ந்த அதிகாரிகள் இந்த சொகுசு கப்பலில் சோதனை நடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
கரீபியன் தீவில் இருக்கும் செயிண்ட் பாரிஸ் பகுதியில் இந்த கப்பல் நின்றிருந்த போது சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஜெஃப் பெசோஸ் கப்பலில் இல்லை என்றும் அவர் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்திருக்கும் லாரென் சான்செஸ் தனது நண்பர்களோடு கப்பலில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அப்போது லாரென் சான்செஸ் சன் பாத் எடுத்து கொண்டிருந்தாராம்.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் சுங்கத்துறை அதிகாரிகள் இந்த கப்பலில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் . இதனால் லாரென் சன்சாஸ் மற்றும் நண்பர்களின் பணிகள் எதுவும் பாதிக்கப்பட வில்லையாம். லாரென் சன்சாஸ் இயல்பாக இருக்கும் படங்களும் அதிகாரிகள் கப்பலில் ஆய்வு நடத்தும் படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
பொதுவாக பிரபலங்கள் தங்களுடைய விடுமுறை காலத்தை கழிப்பதற்கும், பார்ட்டி செய்வதற்கும் செயிண்ட் பாரிஸ் தீவிற்கு தான் செல்வார்களாம். அப்படி தான் பெசோஸின் காதலியும் இந்த கப்பலில் சென்றிருந்ததாக தெரிகிறது.
இதனிடையே இது வழக்கமான சோதனை தான் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஜெஃப் பெசோஸும் லாரென் சன்சாஸும் புத்தாண்டுக்கு முந்தைய தினம் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது உண்மையில்லை என ஜெஃப் பெசோஸ் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் தான் சொகுசு கப்பல் ஆய்வு குறித்த தகவல் வந்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications