கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜியோ நிறுவனம் 42.6 லட்சம் வாடிக்கையாளர்களை, அதன் வாடிக்கையாளர்கள் பட்டியலில் இணைத்துள்ளது.
கொரோனா பரவல் காலத்தில் சில துறைகள் தவிர, பெரும்பாலான துறைகள் சரிவினை சந்தித்து வருகின்றன. அந்த வகையில் ஏற்றம் கண்ட துறைகளில் ஒன்று தொலைத் தொடர்பு துறையும் ஒன்று.
அதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே சரிவினைக் கண்டு வந்த சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கொரோனாவின் வருகைக்கு பின்னர் துளிர் விட ஆரம்பித்துள்ளன.
வளர்ச்சி பாதை
கொரோனாவின் காரணமாக நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன. இதனால் இணைய இணைப்புக்காக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அதிகளவிலான டேட்டாவினையும், அதே நேரம் வாய்ஸ் கால் சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பலவேறு தொலைத் தொடர்பு நிறுவனங்களும், பல மாதங்களுக்கு பிறகு வளர்ச்சியினை கண்டு வருகின்றன.
ஜியோ முதலிடம்
ஜியோவின் வருகைக்கு பின்னர் வோடபோன் ஐடியா, ஏர்டெல், பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது தான் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளன. கடந்த ஆறு மாதங்களாகவே ஜியோவினை பின்னுக்கு தள்ளி, பார்தி ஏர்டெல் முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், பிப்ரவரியில் மீண்டும் முதலிடத்தினை ஜியோ பிடித்துள்ளது.
முதல் முறையாக இணைப்பு
பார்தி ஏர்டெல் நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் 37.3 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. இதே வோடபோன் ஐடியா நிறுவனம் 15 மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக, பிப்ரவரி மாதத்தில் 6.5 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. எனினும் பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
மொத்த வாடிக்கையாளர்கள்
கடந்த பிப்ரவரி மாத நிலவரப் படி, ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 41.49 கோடியாகவும், ஏர்டெலின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 34.83 கோடியாகவும், வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 28.26 கோடியாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications