ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய 3 பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரே நேரத்தில் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்த முடிவு செய்தன. இந்த கணிசமான விலை உயர்வு இந்தியாவின் நுகர்வோரை கடுமையாக பாதித்துள்ளது, இந்த விலை உயர்வால் பயனர்கள் வருத்தமடைந்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, X தளத்தில் பல பயனர்கள் கட்டண உயர்வுக்கு எதிராக போஸ்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஜியோ பயனர்கள் திடீர் மாற்றத்தைப் பற்றி புகார் செய்து வருகின்றனர். "#JioBoycott" என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி X தளத்தில் 40,000-க்கும் மேற்பட்ட போஸ்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர். மூன்று நிறுவனங்களை விட குறைவான விலையில் சேவை வழங்கும் BSNL-ஐ மாற்றுத் தேர்வாக பயன்படுத்த, பல பயனர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும், சில மலிவு விலையிலான திட்டங்களில் இருந்து ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 'அன்லிமிடெட் 5G' சேவையை நீக்கியுள்ளன. முன்னர் இருந்த அதே திட்டத்தில், தினசரி டேட்டா தேவையை பூர்த்தி செய்து வந்த மொபைல் டேட்டா பயனர்கள் இனிமேல் அதை பயன்படுத்த முடியாது. அனால் இப்பொழுது அதிக விலையுடன் அதே டேட்டா பிளான் கிடைக்கிறது.
"JioBoycott" என்ற ஹேஷ்டேக்குக்கு இணையாக, நெட்டிசன்கள் "BSNLkigharwapsi" ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். இது BSNL-க்கான ஆதரவு அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டுகிறது. இது X தளத்தில் 45,000 போஸ்ட்களை கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களின் சேவை திட்டங்களுடன் ஒப்பிடும்போது அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்தின் சேவை திட்டங்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. மேலும் X தளத்தில் உள்ள பயனர்கள் BSNL-க்கு மாற 5G இணைப்புகளை விட்டுவிட தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.
BSNL திட்டம் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை 30 நாட்களுக்கு ரூ.199-க்கு வழங்குகிறது. மறுபுறம், ஏர்டெல் மாதத்திற்கான ரீசார்ஜ் திட்டத்தில், ஒரு நாளைக்கு 2GB டேட்டாவிற்கு ரூ.379 ரூபாய்க்கு வழங்குகிறது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ 28 நாட்கள்ளுக்கான 2GB டேட்டா திட்டத்தை ரூ.349-க்கு வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களின் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலைகளை ரூ.600 வரை உயர்த்தியுள்ளன. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டின் வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களில் மிகப்பெரிய விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. இந்த திட்டம் முதலில் ரூ.2,999 ஆக இருந்தது, தற்போது ரூ.3,599 ஆக அதிகரித்துள்ளது
இந்த விலை உயர்வுக்கு நிறுவனங்கள் காரணம் கூறியுள்ளன. பயனர் ஒருவரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை (ARPU) பராமரிக்க இந்த கட்டண உயர்வு அவசியம் என்று அவை தெரிவித்துள்ளன. புதிய கட்டணங்கள் ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு ஜூலை 3-ஆம் தேதியும், வோடபோன் ஐடியா ஜூலை 4-ஆம் தேதியும் அமலுக்கு கொண்டு வந்தன.


Click it and Unblock the Notifications