இந்தியாவின் டெலிகாம் சேவை நிறுவனங்கள் 4ஜி மற்றும் 5ஜி சேவைக்காக பெரும் தொகையை முதலீடு செய்துள்ள நிலையில், போட்ட முதலீட்டை எடுக்கும் திட்டத்துடனும், கூடுதல் லாபம் பெற வேண்டும் என்ற இலக்குடனும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
48 மணிநேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை 10 முதல் 25 சதம் வரை உயர்த்தியுள்ளன. இதன் மூலம், 5 ஜி சேவை, 4ஜி சேவை வாடிக்கையாளர்கள் மூலம் கூடுதல் வருமானம் பெற முடியும்.

இந்த கட்டண உயர்வில் முக்கியமான டார்கெட் என்றால் அது 5ஜி சேவை வாடிக்கையாளர்கள் தான். ஆனால், கட்டண உயர்வு 5ஜி சேவைக்கு மாற்றும் புதிய வாடிக்கையாளர் மற்றும் பியூச்சர் போனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனுக்கு மாறுவதை குறைக்கும். இந்த கட்டண உயர்வு மூலம் டெலிகாம் நிறுவனங்கள் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்டது என சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களில் செய்யப்பட்ட இந்த கட்டண உயர்வு மூலம் 3 டெலிகாம் சேவை நிறுவனங்களும் ஆண்டுக்கு சுமார் ரூ.47,500 கோடி வரை வருமானத்தைப் பெற முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, 5ஜி சேவையைப் பயன்படுத்தும் மொபைல் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வருமானம் (மக்களுக்கு கூடுதல் செலவு) பெற உள்ளது.
இந்த கட்டண உயர்வு மூலம் டெலிகாம் நிறுவனங்கள் மிகவும் எதிர்பார்க்கும் 5ஜி வாடிக்கையாளர்களை காட்டிலும் 4ஜி பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும். ஏனெனில், இந்த கட்டண உயர்வில் 4ஜி திட்டங்களில் குறைவாக பாதிக்கிறது. இதனால், 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு அவர்கள் மாறுவது தாமதமாகலாம்.
கொரோனா பெருந்தொற்றுக்கு முன்னர், ஒவ்வொரு மாதமும் 50 லட்சம் பியூச்சர் போன் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்-க்கு மாறி வந்தனர். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை 30 முதல் 35 லட்சமாகக் குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் குறைந்து 31 லட்சமாக இருக்கலாம் என கவுண்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குநர் தருண் பதக் கருத்து தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தனியார் நிறுவனங்கள் மூன்றும் பியூச்சர் போன் பயன்படுத்துவோரை 4ஜி சேவைக்கும், ஸ்மார்ட்போன் வாடிக்கையாளராகவும் மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்து மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களையும், கூட்டணியில் தள்ளுபடியும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டண உயர்வால் இப்பிரிவு மக்கள் மொத்தமாக 4ஜி அல்லது 5ஜி-க்கு மாறுவது தடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஜியோ, ஏர்டெல், Vi பெரும் வாடிக்கையாளர் கூட்டத்தையும், வருமானத்தையும் இழக்க நேரிடும்.


Click it and Unblock the Notifications