மும்பை: முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் 3.76 மில்லியன் (37 லட்சம்) சந்தாதாரர்களை இழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது மாதமாக ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிவிலேயே இருக்கிறது.
கடந்த ஜூலை மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் ,வோடபோன் ஐடியா உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. கிட்டத்தட்ட 15 சதவீதம் அளவிற்கு ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிருப்திக்கு ஆளாகினர்.

அதே வேளையில் அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் குறைந்த ரீசார்ஜ் கட்டணத்தில் அதிக சலுகைகள் கொண்ட திட்டங்களை வழங்குவதால் பலரும் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாறத் தொடங்கினர்.
அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் 3.76 மில்லியன் சந்தாதாரர்களை இழந்துள்ளதாம். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என இந்த நான்கு மாத காலத்தில் மட்டும் ஜியோ நிறுவனம் மொத்தமாக 16.48 மில்லியன் பயனாளர்களை இழந்துள்ளது.
இதே காலகட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 1.97 மில்லியன் சந்தாதாரர்களை இழந்திருக்கிறது. இதனிடையே அக்டோபர் மாத காலத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக 5 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் மாத இறுதி நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 460 மில்லியனாக இருக்கிறது, ஏர்டெல் நிறுவனம் 385 மில்லியன் வாடிக்கையாளர்களையும் வோடபோன் ஐடியா நிறுவனம் 210.5 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொருத்தவரை 92.4 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
அக்டோபர் மாதத்தில் தங்களுடைய எண்களை வேறு நிறுவனத்திற்கு போர்ட் செய்ய வேண்டும் என ட்ராயிடம் 13.45 மில்லியன் கோரிக்கைகள் வந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத நிலவரப்படி இந்தியாவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 1.059 பில்லியன் ஆக இருந்தது இதுவே அக்டோபர் மாதத்தில் 1.06 பில்லியன் என உயர்ந்துள்ளது.
இதனிடையே ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வாடிக்கையாளர்களை இழந்து வந்த ஏர்டெல் நிறுவனம் அக்டோபர் மாதத்தில் புதிதாக வாடிக்கையாளர்களை பெற தொடங்கியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் அக்டோபர் மாதத்தில் மட்டும் புதிதாக 1.9 மில்லியன் வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்துள்ளது.
ஜியோ நிறுவனம் தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வருவதால் அவர்களை மீட்டெடுக்க புதிய பிளான் விரைவில் அறிவிக்கலாம் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications