பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு நடவடிக்கையாக ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் தனது ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தது. வோடபோன் ஐடியா, ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்தன. இது வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை அதிகரித்தது. இதனால் பலரும் தங்களுடைய ஏர்டெல் மற்றும் ஜியோ சிம் கார்டுகளை BSNL சிம் கார்டுக்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து வந்தனர். கட்டண உயர்வு குறித்த கருத்துகளும் சோசியல் மீடியா தளங்களில் பகிரப்பட்டது. இந்நிலையில் தற்போது ஒரு ரீசார்ஜ் திட்டத்தில் ஜியோ நிறுவனம் மாற்றம் செய்துள்ளது.
ஜியோ திட்ட நன்மைகள்: கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஜியோ நிறுவனம் அதன் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டத்தை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இப்போது ஹீரோ 5ஜி என இத்திட்டத்திற்கு மறுபெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் செல்லுபடியை 28 நாட்களில் இருந்து 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளது.

தினசரி டேட்டாவை மாற்றாமல் பயனர்களுக்கு நீண்ட சேவையை வழங்குகிறது. அதாவது இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவைத் தொடர்ந்து வழங்குகிறது. ஆனால் மொத்த டேட்டா வரம்பான 56 ஜிபி டேட்டாவில் இருந்து 60 ஜிபியாக அதிகரித்துள்ளது.
ஜியோ கட்டண உயர்வு: இந்த மாத தொடக்கத்தில், ஜியோ கட்டண உயர்வை அறிவித்தது. நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.209 என்ற விலையில் இருந்த திட்டம் தற்போது ரூ.249 ஆக அதிகரித்தது. அதேபோல் ரூ.666 என்ற விலையில் இருந்த திட்டம், 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்கியது. தற்போது இந்தத் திட்டம் ரூ.799 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.2,999 விலையுள்ள வருடாந்திர திட்டம் ரூ.3,599 ஆக மாற்றியமைக்கப்பட்டது. இந்த அதிகரிப்பு இருந்தபோதிலும், ஜியோ ரூ.1,199 திட்டத்தின் விலையை ரூ.999 ஆக குறைத்துள்ளது. அதன் செல்லுபடி நாட்களை 84 நாட்களில் இருந்து 98 நாட்களாக நீட்டித்துள்ளது.
ஜியோ தனது 5 ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் போது, இந்த மேம்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ரூ.349 திட்டத்திற்கான சமீபத்திய புதுப்பிப்புகள் பயனர்களுக்கு உதவியாக இருந்தாலும், விரைவில் பிற திட்டங்களுக்கும் இதே போன்ற திருத்தங்கள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications