இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி ரீடைல் துறையில் அனைத்து பிரிவுகளிலும் இறங்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் இருக்கும் வேளையில், தற்போது டெலிகாம் மற்றும் ஸ்மார்ட்போன்களை குத்தகைக்கு விடும் புதிய வர்த்தகத்தில் இறங்க உள்ளது.
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் ரிலையன்ஸ் ரீடைல், ஜியோ இன்போகாம், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மத்தியில் முக்கியமான வர்த்தகம் நடக்க உள்ளது. இது டெலிகாம் கருவியின் குத்தகைக்கு விடும் வர்த்தகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறது, இதேபோல் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் தனது வர்த்தகத்தைப் பலப்படுத்த உள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரீடைல் பிரிவில் இருக்கும் தொலைத்தொடர்பு சாதனங்களை ஜியோ இன்ஃபோகாம் வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு வழங்கும் நோக்கில், ஜியோ நிதி சேவைகள் (JFS) நிறுவனத்தின் துணை நிறுவனம் சுமார் 36,000 கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகளை வாங்குவதற்குப் பங்குதாரர்களின் ஒப்புதலைக் கோரி வருகிறது.
ஜேஎஃப்எஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஜியோ லீசிங் சர்வீசஸ் என்ற துணை நிறுவனம், ரூட்டர்கள் மற்றும் செல்போன்கள் போன்ற தொலைத்தொடர்பு கருவிகளை ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது. இந்த கருவிகளை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமின் வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு வழங்க ஜியோ லீசிங் சர்வீசஸ் திட்டமிடப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து கடந்த ஆண்டு பிரிக்கப்பட்ட ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், ஏற்கனவே ஜியோ இன்ஃபோகாமின் AirFiber வைஃபை சேவைகள், ஃபோன்கள் மற்றும் லேப்டாப்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை வாடகைக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது.
இந்த நடவடிக்கையின் மூலம், ஹெவ்லெட் பேக்கார்டு மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்கள் இயங்கும் டிவைஸ் வாடகை சந்தையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் போட்டியிட உள்ளது.
இந்த 36000 கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகளை வாங்கும் முக்கியமான திட்டத்திற்குப் பங்குதாரர்களின் வாக்குப்பதிவு ஜூன் 22 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த ஒப்பந்தம் 2025 மற்றும் 2026 நிதிய ஆண்டுகளில் நிறைவேற்றப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனி நிறுவனமாக இருப்பதால், ரிலையன்ஸ் ரீடைல் உடன் செய்யப்படும் இந்த ஒப்பந்தத்திற்கு முதலீட்டாளர்களிடம் ஒப்புதல் பெறுவது அவசியம்.


Click it and Unblock the Notifications