ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிதியியல் சேவை நிறுவனமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனியாக பிரிக்கப்பட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பின்பு முதல் முறையாக தனது காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளது. பண்டிகை காலம் துவங்கிவிட்ட நிலையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் மொத்த லாபமாக 668.2 கோடி ரூபாய் அளவிலான தொகையை பெற்றுள்ளது. இது முந்தைய காலாண்டை காட்டிலும் சுமார் 2 மடங்கு அதிக லாபத்தை பெற்றுள்ளது. இக்காலக்கட்டத்தில் ஆப்ரேஷன்ஸ் மூலம் அதிக லாபத்தை பெற்றுள்ளது.

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் கன்ஸ்யூமர் பைனான்ஸ், சொத்து மேலாண்மை முதலீட்டு சேவைகள் மற்றும் இன்சூரன்ஸ் ஆகிய பிரிவில் வர்த்தகம் செய்ய துவங்கியுள்ளது. இத்துறையில் ஏற்கனவே பஜாஜ் பைனான்ஸ் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் காலாண்டு அடிப்படையில் லாபத்தில் இரட்டிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் காலாண்டில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் சுமார் 608 கோடி ரூபாய் அளவிலான வருவாயை ஈட்டியுள்ளது. இது ஜூன் காலாண்டை காட்டிலும் 47 சதவீதம் அதிகமாகும். வட்டி வருமான அளவீட்டை பார்க்கும் போது முதல் காலாண்டை காட்டிலும் 2வது காலாண்டில் குறைவு தான். ஈவுத்தொகை வருமானம் 217 கோடி ரூபாய் கிடைத்து மூலம் இந்நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தில் செலவுகள் ஜூன் காலாாண்டை ஒப்பிடுகையில் 33 சதவீதம் அதிகரித்து 71 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு முக்கியமாக காரணம் ஊழியர்களின் சம்பளம் தான், ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தனியாக பிரிந்த பின்பு நாடு முழுவதும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் புதிய அணியை உருவாக்குவதில் அதிகப்படியான செலவுகளை செய்துள்ளது.
இன்று ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் ஊழியரான ஏஆர் கணேஷ்-ஐ தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஐசிஐசிஐ வங்கியில் சுமார் 13 வருடங்களாக பணியாற்றிய நிலையில் கடைசியாக தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தார்.
இன்றைய வர்த்தக முடிவில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 0.27 சதவீதம் அதிகரித்து 224.85 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications