ஈஷா அம்பானி, அன்ஷுமான் தாக்கூர் மற்றும் ஹிதேஷ் குமார் சேத்தியா ஆகியோரை ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் மூவரையும் நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமித்து அனைத்து வர்த்தக விரிவாக்க பணிகளையும் செய்து வந்தாலும் நிதி சேவை துறையில் கட்டுப்பாட்டாளராக இருக்கும் ரிசர்வ் வங்கி இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இதற்கான கோரிக்கையை சில மாதங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் முன்வைக்கப்பட்ட நிலையில் ஆர்பிஐ நவம்பர் 15 ஒப்புதல் அளித்து அறிக்கையை ரிலையன்ஸ் குழுமத்திற்கு அனுப்பிய நிலையில் மதியம் இத்தகவல் வெளியானது.

ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பங்குகள் இன்று மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக முடிவில் 1.23 சதவீதம் உயர்ந்து ரூ.227.00 ஆக உயர்ந்தது. இதன் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1.44 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்ட ஈஷா அம்பானி, அன்ஷுமான் தாக்கூர் மற்றும் ஹிதேஷ் குமார் சேத்தியா-வின் கல்வி தகுதிகள், அனுபவம் என்ன..?
ஈஷா அம்பானி - . ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக நியமிக்க முகேஷ் அம்பானி மகள் என்ற ஒரு தகுதி போதும் என்று விமர்சனம் செய்தாலும் இன்றைய போட்டி மிகுந்த சந்தையில் வெற்றிப்பெற தனி அனுபவமும், கல்வியும் தேவை.
அந்த வகையில் ஈஷா அம்பானி வேற ரகம், யேல் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் தெற்காசிய ஆய்வு என இரட்டைப் பட்டம் பெற்றவர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர். ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் நிர்வாகத் தலைமைக் குழுவில் உயர் பதவியில் உள்ளார்.
அன்ஷுமன் தாக்கூர் பொருளாதார பிரிவில் பட்டம் பெற்றவர் மட்டும் அல்லாமல் அகமதாபாத் ஐஐஎம்-ல் எம்பிஏ படித்தவர். சுமார் 24 வருட அனுபவத்துடன், கார்ப்பரேட் உத்தி மற்றும் முதலீட்டு வங்கி துறையில் அனுபவமுள்ள அன்ஷுமன் தாக்கூர் பல்வேறு தொழிற்துறையில் பணியாற்றியுள்ளார்.
தற்போது ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவராக இருக்கும் அன்ஷுமன் தாக்கூர், அங்கு மூலோபாயம் மற்றும் திட்டமிடல் பிரிவின் தலைவராக உள்ளார். அவர் 2014 இல் ரிலையன்ஸ் குழுமத்தில் சேர்வதற்கு முன் மோர்கன் ஸ்டான்லி, ஆர்தர் ஆண்டர்சன் மற்றும் எர்ன்ஸ்ட் & யங் ஆகிய நிறுவனத்தில் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
ஹிதேஷ் குமார் சேத்தியா இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு சிறந்த நிதிச் சேவை நிர்வாகி ஆவார். அவர் ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்களுடன் பணிபுரிந்துள்ளார்.
கடைசியாக McLaren Strategic Ventures என்னும் மாபெரும் முதலீட்டு நிதியியல் சேவை நிறுவனத்தின் ஐரோப்பிய பிரிவின் தலைவராக இருந்தார். ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன பணிக்காக பல வருடங்களுக்கு பின்பு இந்தியா வந்துள்ளார்.
ஹிதேஷ் குமார் சேத்தியா அடுத்த 3 வருட காலத்திற்கு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications