ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண வைபவம் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு பல பிரபலங்களும் மும்பையில் வந்து குவிந்தனர். சிலர் தனி விமானங்கள் மூலமும் மும்பையை வந்தடைந்தனர். திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்கள் சொகுசு கப்பல்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு இலவசமாக 3 மாத ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ வழங்குவதாக போலியான மெசேஜ் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது. அதன் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
அனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு 3 மாத இலவச ரீசார்ஜ் வழங்குவதாக பொய்யான மோசடி செய்தி வாட்ஸ் அப்பில் தற்போது பரவி வருகிறது. இந்தியில் எழுதப்பட்ட இந்த மெசேஜ், இலவச ரீசார்ஜ் சலுகையைப் பெறுவதற்கு ஒரு லிங்கை கிளிக் செய்யுமாறு பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது.

இது முற்றிலும் போலியானது. ஜியோ நிறுவனம், பயனாளர்களுக்கு எந்த வித இலவச ரீசார்ஜையும் வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் அவை உங்களுக்கு பண இழப்பை ஏற்படுத்தலாம்.
ஜூலை 12ஆம் தேதி அனந்த் அம்பானியின் திருமணத்தையொட்டி, முகேஷ் அம்பானி இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 3 மாதங்களுக்கு 799 ரூபாய் இலவச ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகிறார். எனவே கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் நம்பருக்கு ரீசார்ஜ் செய்யவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்யும்போது "மஹா கேஷ்பேக்" என்ற அறியப்படாத தளத்திற்கு செல்கிறது.
"MyJio" ஆப் போன்ற அதிகாரப்பூர்வ ஆப்ளிகேஷன் மூலமாகவோ அல்லது "Google Pay" போன்ற நம்பகமான ஆன்லைன் பேமெண்ட் ஆப்ஸ் மூலமாகவோ மட்டுமே பயனர்கள் தங்கள் நம்பருக்கு ரீசார்ஜ் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். பிஷிங் லிங்குகள் மூலம் உங்களுக்கு இது போன்ற அறிவிப்புகள் வந்தால், அவை போலியானதாக இருக்கலாம்.
மேலும், ரிலையன்ஸ் ஜியோ உண்மையில் இலவச 3 மாத ரீசார்ஜ் திட்டத்தை வழங்கினால், அது செய்திகளில் பரவலாக அறிவிக்கப்படும். பரிவர்த்தனைகளுக்கு அதிகாரப்பூர்வ அப்ளிகேஷன்களை மட்டும் பயன்படுத்துவதன் மூலம், மோசடிகளில் இருந்து பயனர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் மோசடி செய்திகளை விரைவாக அடையாளம் காண்பது எப்படி?: முதலில், தெரியாத எண்களில் இருந்து வரும் செய்திகளை கவனிக்கவும். குறிப்பாக அவற்றில் சந்தேகத்திற்குரிய லிங்குகள் இருந்தால் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் புகழ்பெற்ற நிறுவனங்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். எனவே அனுப்புநரின் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்கவும். இரண்டாவதாக, நீங்கள் கேஷ் பேக் வென்றதாகக் கூறுவது அல்லது நீங்கள் உடனடியாக பதிலளிக்கவில்லை என்றால் உங்கள் கணக்கு செயலிழக்கப்படும் என்று கூறி அவசர உணர்வை உருவாக்குவது, மோசடிக்காரர்களில் யுக்தியே. இதில் நீங்கள் சிக்கினால் நிதி இழப்பு ஏற்படலாம் என்பதை மறவாதீர்கள்.


Click it and Unblock the Notifications