செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகையே புரட்டிப் போடப்போகும் கூகுளின் மிகவும் சக்திவாய்ந்த 'ஜெமினி 3' மாடல் அறிமுகமாகியுள்ள நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மிகப் பெரிய பரிசை அறிவித்துள்ளது.
ஜியோவின் அனைத்து அன்லிமிடெட் 5G பயனர்களுக்கும், கூகுளின் பிரீமியம் திட்டமான ஜெமினி 3 புரோ (Gemini 3 Pro Plan)-க்கான அணுகல், 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் மொத்த மதிப்பு ரூ.35,100 ஆகும். இந்த அறிவிப்பு, ஜியோ பயனர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து 5G பயனர்களுக்கும் சலுகை : முன்பு ஜெமினி சேவையை இளம் பயனர்களுக்கு மட்டும் வழங்கி வந்த ஜியோ, தற்போது இந்த சலுகையைத் தனது அன்லிமிடெட் 5G திட்டப் பயனர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை இரண்டு முக்கிய மாற்றங்களைக் குறிக்கிறது. ஒன்று, அதிகப்படியான இந்தியர்களுக்கு AI தொழில்நுட்பம் சென்றடையும். இரண்டாவது, இந்தச் சேவை இப்போது கூகுளின் மிகவும் மேம்பட்ட ஜெமினி 3 தொழில்நுட்பத்துடன் கிடைக்கிறது.
சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவை அதிக இந்தியர்களிடம் கொண்டு சேர்ப்பதே தங்கள் நோக்கம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சலுகை நவம்பர் 19ஆம் தேதியான இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சலுகையை எப்படி பெறுவது.?: தகுதியுள்ள ஜியோ பயனர்கள் இந்தச் சலுகையை MyJio செயலி மூலம் மிகவும் எளிதாகப் பெறலாம். முதலில், உங்கள் மொபைலில் MyJio செயலியைத் திறந்து கொள்ளவும். பின்னர், செயலியின் முகப்புப் பக்கத்தில் உள்ள "Early access" அல்லது "Claim Now" என்ற அறிவிப்பு பேனரை தேடிக் கிளிக் செய்யவும்.
அங்குள்ள விதிமுறைகளைப் படித்து ஒப்புதல் (Agree) அளித்தவுடன், உங்கள் ஜெமினி புரோ சேவை உடனடியாக செயல்பட தொடங்கிவிடும். செயல்படுத்தப்பட்ட பின், பயனர்கள் ஜெமினி செயலியை பயன்படுத்தும் போது தங்கள் பிரீமியம் (புரோ) திட்டம் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
ஜெமினி 3-இன் முக்கியத்துவம் என்ன..?:கூகுள் நிறுவனம் ஜெமினி 3-ஐ உலகளவில் அறிமுகம் செய்திருக்கிறது. கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, ஜெமினி அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அது தற்போது 650 மில்லியனுக்கும் அதிகமான மாதாந்திரப் பயனர்களைக் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
புதிய ஜெமினி 3, முந்தைய பதிப்புகளை காட்டிலும் பல மடங்கு சிறந்த சிந்தனை மற்றும் புரிந்துகொள்ளும் திறனைக் கொண்டுள்ளது. அறிவியல், கணிதம், கோடிங் எனப் பல துறைகளில் இது சிறப்பான செயல்பாட்டை காட்டுகிறது. ஜியோவின் இந்த இலவச சலுகை, மேம்பட்ட இந்த ஜெமினி புரோ அம்சங்களை அதிக இந்தியர்கள் பயன்படுத்தவும், பலன் பெறவும் வழிவகுக்கும் என்பதால், இது ஒரு முக்கியமான தொழில்நுட்ப நகர்வாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications