ஜியோ ஐபிஓ இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. இந்திய பங்கு சந்தை வரலாற்றில் மட்டுமின்றி, உலகளாவிய முதன்மை சந்தையிலும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
ஜியோ ஐபிஓ விண்ணப்பங்கள் கடந்த 21ஆம் தேதி தொடங்கின, இன்றுடன் விண்ணப்பங்கள் முடியும் நிலையில் போட்டி போட்டு கொண்டு பலரும் ஜியோ பங்கினை வாங்க விண்ணப்பம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 1 கோடி விண்ணப்பங்களை பெற்ற உலகின் முதல் ஐபிஓ என்ற சாதனையை ஜியோ படைத்துள்ளது.

இதற்கு முன்பு வாரி எனர்ஜிஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளிவந்த போது சுமார் 97 லட்சம் விண்ணப்பங்களை பெற்றிருந்தது. அதற்கு அடுத்தபடியாக பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் பாரத் கோக்கிங் கோல் ஆகிய நிறுவனங்கள் தலா 90 லட்சம் விண்ணப்பங்கள் வரை பெற்று முந்தைய பட்டியலில் இடம்பிடித்திருந்தன. தற்போது அந்த சாதனைகளை எல்லாம் ஜியோ பின்னுக்குத் தள்ளியுள்ளது.
ஜியோ ஐபிஓ-வில் ஒரு பங்கை வாங்குவதற்கான விலை 1,065 முதல் 1,119 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 12 பங்குகள் கொண்டது ஒரு லாட். சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு லாட் (12 பங்குகள்) வாங்க குறைந்தபட்சம் 13,428 ரூபாய் தேவைப்படும். தகுதியான நிறுவன ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு 54 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஜியோ ஐபிஓ-விற்கு நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. இன்று பிற்பகல் 1:20 மணி நிலவரப்படி வழங்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை விட ஜியோ ஐபிஓ 7.93 மடங்கு அதிகமாக சந்தா பெறப்பட்டுள்ளது. தகுதிபெற்ற நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 16.87 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் 10.90 மடங்கு வரை விண்ணப்பங்களை பெற்றுள்ளது. சில்லறை வர்த்தகர்களின் பங்கேற்பும் சிறப்பாக உள்ளது, அவர்கள் தரப்பிலிருந்து 2.23 மடங்கு பங்குகள் கோரப்பட்டுள்ளன. சில்லறை முதலீட்டாளர்களின் ஏலம் 21,250 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. மேலும் தகுதியான ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்குகள் 2.59 மடங்கு சந்தா பெற்றுள்ளன.
ஜியோ ஐபிஓவுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு வரும் 26ஆம் தேதி பங்குகள் ஒதுக்கப்படும். இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும். பங்குகள் ஒதுக்கப்பட்டால் அவை தானாகவே டீமேட் கணக்கில் சேர்ந்துவிடும். வரும் 28ஆம் தேதி தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தையில் ஜியோ பட்டியலிடப்பட உள்ளது. ஜியோ பங்குகள் கிரே மார்க்கெட்டில் சிறப்பாக வர்த்தகமாகி வருவதால் பட்டியலிடப்படும் போது 20% அதிகமான விலைக்கே பட்டியலிடப்படும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

