இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வாக வெளியாக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் அக்டோபர் 14ஆம் தேதி ஐபிஓ வெளியிடுவதற்கான முழு திட்டத்தையும் RHP அறிக்கையின் வாயிலாக சமர்ப்பித்துள்ளது.
ஜியோ பிளாட்பார்ம்ஸ்-ன் ஐபிஓ கதவுகள் அக்டோபர் 21ஆம் தேதி திறந்து அக்டோபர் 23ஆம் தேதி மூடப்படுகிறது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான கதவுகள் அக்டோபர் 19ஆம் தேதி திங்கட்கிழமையே திறக்கப்படுகிறது. ஏற்கனவே கணித்தன் படி அடித்த வாரம் ஜியோ ஐபிஓ வெளியாகிறது, இந்த அதிகாரப்பூர்வ தேதிகளை ரிலையன்ஸ் இன்று வெளியிட்டது.

இந்த ஐபிஓ-வில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 27 கோடி பங்குகளை 10 ரூபாய் முகமதிப்புடன் விற்பனை செய்து முதலீட்டைத் திரட்ட உள்ளது. இந்த ஐபிஓ-வில் ரிலையன்ஸ் குழும ஊழியர்களுக்காக சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்களுக்காகவும் சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ விலை குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில், சந்தை கணிப்புகள் படி ஒரு பங்கு 1065 - 1119 ரூபாய் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் எனக் கணிக்கப்படுகிறது. இதன் மூலம் ஜியோ பிளாட்பார்ம்ஸ் 10.3 லட்சம் கோடி மதிப்பீட்டைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான ஐபிஓ-க்களில் offer-for-sale என்ற ஒரு பிரிவு இருக்கும், ஆனால் ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ-வில் அப்படியொரு விஷயமே இல்லை. அதாவது ஏற்கனவே இந்த நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பவர்கள் ஐபிஓ வெளியிடும் போது விற்கப்படும் பங்குகளை offer-for-sale பிரிவில் விற்பார்கள்.
ஆனால் ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள மெட்டா, கூகுள் மற்றும் வளைகுடா நாடுகளின் முதலீட்டு அமைப்புகள் பங்குகளை விற்க வேண்டாம் என முடிவு செய்திருக்கும் காரணத்தால் 27 கோடி பங்குகளும் fresh issue ஆகவே வெளியாக உள்ளது.
ஏற்கனவே க்ரே மார்கெட்டில் ஜியோ பங்குகள் 218 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வரும் காரணத்தால் இதன் மதிப்பு 1337 ரூபாய் வரையில் இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த ஐபிஓ-வில் அப்பர் பேண்ட் அளவு 1119 ரூபாயாக மட்டுமே இருக்கும் என கணிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
