இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.குறிப்பாக யுபிஐ எனப்படும் பணப்பரிமாற்ற முறை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ளது. இதனை பயன்படுத்தி முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தற்போது யுபிஐ சேவையிலும் களமிறங்க உள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் யுபிஐ பயன்பாடு: இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், டிஜிட்டல் பரிவர்த்தனை பெருமளவில் வளர்ச்சி அடைந்தது. கொரோனா காலத்தில் யுபிஐ செயலிகளின் பயன்பாடு அதிகரித்தது. இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பண பரிவர்த்தனைகளிலும் 40 சதவீதத்துக்கும் அதிகமான பரிமாற்றங்கள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில், யுபிஐ முறையை 30 கோடிக்கும் அதிகமான தனி நபர்களும், 5 கோடிக்கும் அதிகமான வணிகர்களும் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரிப்பால் பணம் செலுத்துவதை யுபிஐ மிகவும் எளிமையாக்கியுள்ளது. யுபிஐ-யின் வளர்ச்சியால், பல்வேறு வகையான கட்டணம் செலுத்தும் முறை எளிதானதுடன், டெபிட் கார்டுகளின் பயன்பாடும் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.
ஜியோ நிறுவனத்தின் புதிய திட்டம்: தற்போது இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் செயலிகளாக போன்பே, கூகுள் பே, பீம் செயலி ஆகியவை உள்ளன. இந்நிலையில் மாபெரும் திட்டத்துடன் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனமும் இந்த துறையில் கால்பதிக்கிறது.
பேடிஎம் சவுண்ட்பாக்ஸை போல ஜியோ நிறுவனமும் ஜியோ சவுண்ட்பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சில்லறை கடைகளை இலக்காக கொண்டு ஜியோ சவுண்ட்பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
தற்போதுள்ள ஜியோ பே செயலியுடன் சவுண்ட்பாக்ஸ் தொழில்நுட்பத்தை இணைக்கும் பணிகளை ஜியோ மேற்கொண்டிருக்கிறது. இதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ள ஜியோ நிறுவனம் பேடிம், போன்பே மற்றும் கூகுள் பே நிறுவனங்களுக்கு சவால் கொடுக்கும் வகையிலான திட்டத்துடன் களமிறங்குவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவை பொறுத்துவரை பேடிஎம் நிறுவனம் மக்களிடையே பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக சிறு வணிகர்கள் பெரும்பாலும் தங்கள் கடைகளில் பேடிஎம் சவுண்ட்பாக்ஸை பயன்படுத்துவதை நாம் கண் கூட பார்த்திருக்கிறோம். சவுண்ட்பாக்ஸ் திட்டம் பேடிஎம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிக்கரமாக இருந்தது.
ஆனால் அண்மையில், பேடிஎம் நிறுவனத்தின் ஒரு அங்கமான பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பட ரிசர்வ் வங்கி தடை விதித்தது. பேடிஎம் யுபிஐ செயலி தொடர்ந்து செயல்பட்டாலும் ரிசர்வ் வங்கியின் தடையால் குழப்பமடைந்த வாடிக்கையாளர்கள் வேறு சேவைகளுக்கு மாறி வருகின்றனர். இந்தியாவில் யுபிஐ பண பரிமாற்றம் என்பது வளர்ந்து வரும் ஒரு துறை என்பதால் ஜியோ அதில் தீவிரமான கவனத்தை செலுத்தி வருகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications