கடந்த ஒரு மாதமாக ஜியோ ஹாட்ஸ்டார் டொமைன் பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வழியாக இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் டொமைன் மீண்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர் சரிவை கண்டுள்ளன. இதன் காரணமாக இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ஒரு தளத்தை உருவாக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஒருவேளை ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய 2 தளங்களும் இணைந்தால் அது ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் தான் அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட டெல்லியைச் சேர்ந்த டெவலப்பர் ஒருவர் "Jiohotstar.com" என்ற டொமைனை வாங்கி வைத்திருந்தார்.
டொமைன் முகவரியை விற்பனை செய்ய முடிவு செய்த டெல்லி டெவலப்பர் அதற்கு ரூ.1 கோடி ரூபாயை விலை நிர்ணயம் செய்து அந்தத் தொகையை தன் மேற்படிப்பிற்காக பயன்படுத்தப் போவதாக கூறி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர போவதாக மிரட்டியது. இதற்கு பதில் அளித்த டெக்கி தான் எந்தவித மீறலையும் செய்யவில்லை என்றும், பெரிய நிறுவனத்திடம் போட்டியிடும் அளவிற்கு தன்னிடம் பலம் இல்லை என்றும் பதிலளித்திருந்தார். விரைவில் இந்த இணையதளம் செயலிழந்து போகும் என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்ப சில நாட்களுக்கு முன்பு துபாயை சேர்ந்த ஜெயினம் மற்றும் ஜீவிகா என்ற 2 குழந்தைகள் இந்த டொமைனை பயன்படுத்த தொடங்கினர்.
துபாயைச் சேர்ந்த இந்தக் குழந்தைகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த குழந்தைகள் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். "Jiohotstar.com" டொமைனை ரிலையன்ஸ் குழுவிற்கு மாற்றப் போவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு எந்தவித கட்டணமும் வாங்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த டொமைன் அதிக விலைக்கு விலை போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது எந்தவித கட்டணமும் பெறாமல் ரிலையன்ஸ் குழுமத்திற்கே இந்தக் குழந்தைகள் வழங்கியுள்ளனர். ஒரு இளம் டெவலப்பர் தன் கனவுகளை அடைய விரும்புவதற்காக ஆரம்பத்தில் பெறப்பட்ட டொமைன், 2 குழந்தைகளின் இணையத்தளமாக மாறியது.
இப்போது அதன் உரிமையாளர்களான ஜெயினம் மற்றும் ஜீவிகா இந்த டொமைனை ரிலையன்ஸ் நிறுவனத்திடமே ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து ஒரு மெசேஜையும் தங்கள் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனம் பணம் வழங்கியது என்றும், சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது என்றும் ஆன்லைனில் வதந்திகள் வருகின்றன.
அவை உண்மை இல்லை. நாங்கள் இதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். எந்தவித வற்புறுத்தலும் இன்றி நாங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வழங்கி இருக்கிறோம். ரிலையன்ஸ்-இன் இன்டெலெக்சுவல் ப்ரோபர்ட்டி டீம் ஜெயினம் மற்றும் ஜீவிகாவை தொடர்பு கொண்டுள்ளனர். அதன் பிறகு தாங்கள் டொமைனை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர். மேலும் எந்தவித வற்புறுத்தலும் இன்றி தாங்கள் இந்த செயலைச் செய்ததாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.



Click it and Unblock the Notifications