தற்போது வேலை தேடுபவர்கள் பலருக்கும் லிங்குடின் உதவிகரமான தளமாக மாறி உள்ளது. இது போன்ற இணையதளங்கள் வேலை தேடுவதை எளிதாக்கியுள்ளன என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் இதில் தற்போது ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அதுதான் கோஸ்ட் ஜாப்ஸ் (Ghost Jobs) என்று சொல்லப்படுகிற போலி வேலைகள். இது குறித்த அறிக்கை ஒன்று வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
MyPerfectResume வெளியான சமீபத்திய அறிக்கையின்படி, சுமார் 81% நிறுவனங்களில் இருப்பவர்கள் போலி வேலைகளை வெளியிடுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இவை இல்லாத அல்லது ஏற்கனவே நிரப்பப்பட்ட வேலைகளாகும். சுருக்கமாக சொல்லப்போனால் நீங்கள் விண்ணப்பித்த வேலை உண்மையாகவே இல்லை என்று அர்த்தம்.

வெளியான அறிக்கையின்படி, சுமார் 17% வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் முற்றிலும் போலியானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 21.5% வேலைவாய்ப்பு அறிவிப்புகள் "கோஸ்ட் ஜாப்ஸ்" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கூடுதலாக, 36% ஆட்சேர்ப்பு அதிகாரிகள் குறைந்தது கால் பங்கு வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் உண்மையானவை அல்ல என்று ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் 18% பேர் வேலைவாய்ப்பு விளம்பரங்களில் பத்தில் ஒன்று மட்டுமே உண்மையானவை என்று கூறியுள்ளனர்.
ஆனால், ஆட்சேர்ப்பு அதிகாரிகள் ஏன் உண்மையில் இல்லாத வேலைகளை போஸ்ட் செய்கின்றனர்?: போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் 38% ஆட்சேர்ப்பு செய்பவர்கள் இல்லாத வேலை வாய்ப்புகளுக்காக போலியான போஸ்ட்களை தாங்கள் ஆக்டிவாக இருப்பது போல காட்டிக் கொள்வதற்காக லிங்குடின் போன்ற வேலைவாய்ப்பு தளங்களில் பதிவிடுகின்றனராம்.
மேலும் 36% நிறுவனங்கள் தங்கள் வேலைகளின் செயல்திறனை மதிப்பிடப் போலியான வேலை வாய்ப்பு அறிவிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். அதேசமயம் 26% எதிர்கால திறமை குறித்த விவரங்களைப் பெற முயற்சிக்கின்றனர்.
26% நிறுவனங்கள் வேலைவாய்ப்பு சந்தையில் தங்களுடைய போட்டியாளர்களைப் பற்றிய நுண்ணறிவைப் பெற முயற்சி செய்கின்றனர். மேலும் 25% பேர் தற்போதைய ஊழியர்களை மாற்றுவதில் இருக்கும் சிரமத்தை மதிப்பிட விரும்புகின்றனர் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
வேலை தேடுபவர்கள் என்ன செய்ய முடியும்?: நிறுவனங்கள் தாமாக இது போன்ற போலி வேலை வாய்ப்புகளை வெளியிடுவதை நிறுத்தும் வரை காத்திருப்பதற்கு பதிலாக வேலை வாய்ப்பு சந்தையில் உள்ள எதார்த்தத்தை வேலை தேடுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையான நிறுவனங்களின் வேலை வாய்ப்பு செய்திகள் குறித்து தெரிந்து கொண்டு அதன் பின் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளைக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களுக்குப் பிறகும் எந்தவித பதில் அழைப்பும் வரவில்லை என்றால் அடுத்த வேலைக்கு விண்ணப்பிப்பதை வழக்கமாக வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது


Click it and Unblock the Notifications