உலகின் முன்னணி ஸ்மார்ட் போன் விற்பனை நிறுவனமாக செயல்படக்கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கக்கூடிய டிம் குக் விரைவில் அந்த பதவியில் இருந்து விலகுகிறார். டிம் குக்கை தொடர்ந்து அந்த பதவிக்கு ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பார் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரீமியமான அனுபவம் , புதுப்புது அப்டேட்டுகள் என எப்போதுமே ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்யும்போதெல்லாம் உலகமெங்கிலும் இருக்கக்கூடிய ஆப்பிள் ஐபோன் ரசிகர்கள் அதனை கவனிப்பார்கள். பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்களும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களில் கொண்டு வரக்கூடிய அப்டேட்டுகளை அடிப்படையாக வைத்து தான் தங்கள் ஃபோன்களில் புதிய புதிய அப்டேட்களை கொண்டு வருகின்றன.

அந்த வகையில் உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது. இந்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தற்போது டிம் குக் செயல்படுகிறார். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்தியது, அதேபோல இந்தியாவில் ஐபோன் விற்பனை அதிகரித்ததிலும் இவர் பங்கு முக்கியமானது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலம் ஆப்பிள் நிறுவனத்தை வழிநடத்தி வந்த டிம் குக் அதனை தற்போது அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஹார்ட்வேர் இன்ஜினியரிங் பிரிவு தலைவராக செயல்படக்கூடிய 50 வயதான ஜான் டெர்னஸ் இனி ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு ஏற்பார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதியோடு தலைமை செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்கிறார் டிம் குக், அவருக்கு புதிதாக எக்ஸிக்யூட்டிவ் சேர்மன் என்ற பொறுப்பு வழங்கப்படுகிறது. செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து ஜான் டெர்னஸ் புதிய தலைமை செயல் அதிகாரியாக பதவி வகிப்பார்.

நீண்ட ஆண்டு காலம் ஆப்பிளில் வேலை செய்தவர். ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை முடித்த ஜான் டெர்னஸ் 2001 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் இணைந்தார். அப்போது முதல் தற்போது வரை ஆப்பிள் நிறுவனத்தின் முக்கியமான துறைகளுக்கெல்லாம் இவர் தலைமை தாங்கி இருக்கிறார்.
குறிப்பாக ப்ராடக்ட் டிசைனில் நிபுணத்துவம் பெற்றவர். ஐபோன் ஐமேக், ஐபாட் என பல்வேறு முன்னணி தயாரிப்புகளுக்கு இவர் தலைமை பொறுப்பு ஏற்று நடத்தி இருக்கிறார். தற்போது வைஸ் பிரசிடெண்ட் பதவி வகித்து வரக்கூடிய அவர் ஆப்பிள் நிறுவனத்தின் எட்டாவது தலைமை செயல் அதிகாரியாக இவர் பொறுப்பேற்க இருக்கிறார். சைக்கிளிங் மற்றும் கார் ரேஸில் ஆர்வம் கொண்ட ஜான் டெர்னஸ் 75 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கிறார். தலைமை செயல் அதிகாரியான உடன் இவரது சம்பளமும் சொத்துமதிப்பும், உயர்வு காணும்.
டிம் குக்கை போல இவரும் இந்தியாவை மையமாக கொண்டு ஐபோன் உற்பத்தியை அதிகரிப்பது, ஐபோன் விற்பனையை அதிகரிப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பாரா, ஏஐ சவால்களுக்கு மத்தியில் ஐபோன் விற்பனை மற்றும் அப்டேட்களை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது பதவி விலகும் டிம் குக்கின் சொத்து மதிப்பு 2.9 பில்லியன் டாலராக உள்ளது. ஆப்பிள் நிறுவன பங்குகளின் மூலம் மட்டும் அவருக்கு கணிசமான வருமானம் வருகிறது. இவருக்கு சம்பளமே 74 மில்லியன் டாலர் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications

