இந்தியாவின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பெரிய அளவில் மேம்பட்டு வரும் வேளையில் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இதன் வாயிலாக பெரிய நிறுவனங்கள் அனைத்தும் சிறிய நிறுவனங்களை கைப்பற்ற துவங்கியுள்ளது. சிமெண்ட் துறையில் அனுபவம் இல்லாத அதானி குழுமம் இதுவரையில் 3 நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் கட்டுமானப் பொருட்களின் வர்த்தக பிரிவான ஜேஎஸ்டபிள்யூ சிமெண்ட், ஜெர்மனி நாட்டின் ஹெய்டெல்பெர்க் மெட்டீரியல்ஸ் (Heidelberg) நிறுவனத்துடன் இந்தியாவில் இருக்கும் அதன் 13.4 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை கைப்பற்றுவதற்கான ஆரம்பப் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளதாக தெரிகிறது.

ஹெய்டெல்பெர்க் நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும் உள்ளூர் நிறுவனங்களைப் பெறுவதற்கு JSW குழுமம் வெளியில் சொல்லப்படாத விலை கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து இருதரப்புக்கும் பேச்சுவார்த்தை துவங்கி ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் வேளையில் விரைவில் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
உலகின் இரண்டாவது பெரிய சிமெண்ட் சந்தை இருந்தியாவில் பிராந்திய மற்றும் சரக்கு போக்குவரத்து செலவு நிறைந்த தொழிற்துறையாக உள்ளது. இதனால் உற்பத்தி இடத்திற்கும், நுகர்வு சந்தைக்கும் மத்தியிலான போக்குவரத்து தொலைவு தான் லாபத்தை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது.
இந்த நிலையில் ஜெர்மனி நாட்டின் ஹெய்டெல்பெர்க் இந்தியா-வை விட்டு வெளியேறும் முடிவு மிகவும் முக்கியமானது என்பதால் சிறிது காலம் தேவைப்படலாம். மேலும் ஹெய்டெல்பெர்க் இந்தியா-வை விட்டு வெளியேற முடிவு செய்தால் பல போட்டியாளர்களை ஈர்க்கும் வகையில் ஏலம் மூலம் தனது சொத்துக்கள், வர்த்தகத்தை விற்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
ஹெய்டெல்பெர்க் இந்தியாவில் சுமார் 13 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி திறன்களை கொண்டு உள்ளது. ஹெய்டெல்பெர்க் சிமெண்ட் இந்தியா கீழ் 6.3 மில்லியன் டன் உற்பத்தி தளத்தையும், Zuari Cement மூலம் 7.1 மில்லியன் டன் உற்பத்தி தளத்தையும் கொண்டு உள்ளது.
சமீபத்தில் தான் சுவிஸ் நாட்டின் ஹோல்சிம் நிறுவனம் அம்புஜா சிமெண்ட், ACC சிமெண்ட் ஆகியவற்றை அதானி குழுமத்திற்கு விற்பனை செய்து விட்டு வெளியேறியது. தற்போது ஹெய்டெல்பெர்க் இந்தியாவை விட்டு வெளியேறினால் 2வது வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதாகும்.


Click it and Unblock the Notifications