இந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ சிமெண்ட் விரைவில் ஐபிஓ வெளியீடு செய்வதற்கான பணிகளை தீவிர படுத்தியுள்ளது. ஜின்டால் குடும்பத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது ஜே.எஸ்.டபிள்யூ சிமெண்ட் இந்த நிறுவனம் ஐபிஓ வெளியீட்டுக்கான ஆவணங்களை செபி இடம் தாக்கல் செய்துள்ளது.
ஐபிஓ மூலம் 4,000 கோடி ரூபாயை திரட்டுவதற்கு ஜே.எஸ்.டபிள்யூ சிமெண்ட் முடிவு செய்துள்ளது. இந்த ஐபிஓ வெளியீட்டுக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய பங்குச் சந்தையில் நுழையும் பெரிய சிமெண்ட் நிறுவனமாக இது இருக்கும்.

இந்த ஐபிஓவை பொறுத்த வரை புதிதாக ஈகிவிட்டி பங்குகளை வெளியிட்டு 2000 கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும் ஆஃபர் ஃபார் சேல் முறையில் ஏற்கனவே முதலீட்டாளர்கள் வசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து 2000 கோடி ரூபாய் திரட்டுவது என்றும் ஜே.எஸ்.டபிள்யூ சிமெண்ட் முடிவு செய்துள்ளது.
ஏசியா ஆப்பர்சூனிட்டி ஹோல்டிங்ஸ் மற்றும் சைனர்ஜி மெட்டல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் 937 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன. அதேபோல ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனமும் 125 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கள் கைவசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 65 ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போதைய சூழலில் ஜே.எஸ்.டபிள்யூ சிமெண்டில் 78% பங்கு புரமோட்டோர்கள் வசம் இருக்கிறது, 19.43 % பங்குகள் பொது முதலீட்டாளர்கள் வசம் இருக்கிறது. ஜே.எஸ்.டபிள்யூ சிமெண்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தியாளராக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் ஆண்டுக்கு 20 . 60 மில்லியன் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் வகையிலான திறனை பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ஐபிஓ வெளியீட்டிற்கு முன்னதாக முன்னுரிமை அடிப்படையில் பங்குகளை விற்பனை செய்து முதல் கட்டமாக 400 கோடி ரூபாயை திரட்ட இருப்பதாக தெரிவிக்கிறது.
தற்போது ஐபிஓ வெளியீட்டின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ஜே.எஸ்.டபிள்யூ சிமெண்ட் நாக்பூர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 800 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சிமெண்ட் உற்பத்தி ஆலைகளை நிறுவ உள்ளது, 720 கோடி ரூபாயை பணத்தை கடன்களை திரும்ப செலுத்துவதற்கு பயன்படுத்த உள்ளது.
2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜே.எஸ்.டபிள்யூ சிமெண்ட் நிறுவனம் நாடு முழுவதும் தற்போது ஏழு இடங்களில் உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. தற்போது ஆண்டுக்கு 20 . 60 மில்லியன் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்து வரும் இந்த நிறுவனம் கூடிய விரைவில் இதனை 60 மில்லியன் மெட்ரிக் டன்கள் என உயர்த்த முடிவு செய்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications