தூத்துக்குடி: இந்தியாவில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் மின் உற்பத்தி செய்யும் திட்டப் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. அந்த வகையில் பிரபல ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி (JSW Energy Ltd ) நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் 300 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை அமைப்புகளை நிறுவி முடித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ ரினீவ் எனர்ஜி லிமிடெட் (JSW Renew Energy) நிறுவனம் இந்தியாவின் சோலார் எனர்ஜி கழகத்திடமிருந்து, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் 300 மெகாவாட் ஐஎஸ்டிஎஸ் இணைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி (ISTS-connected wind power project) திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பெற்றிருந்தது.

தற்போது அந்த அமைப்பினை முழுமையாக நிறுவி இருப்பதாக ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி கூறுகிறது. இந்திய சோலார் எனர்ஜி கழகத்திடமிருந்து பெற்ற முதல் பசுமை காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு இருப்பதாக ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பசுமையான மற்றும் நீடித்த நிலை தன்மை கொண்ட எதிர்காலம் என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணம் செய்து வரும் நிலையில் நமது நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில் இந்த புதிய மின் உற்பத்தி திட்டம் பெரும் பங்களிப்பை வழங்கும் என ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் தாராபுரம் பகுதியில் 138 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்திக்கான அமைப்புகளை நிறுவி இருக்கிறது. தற்போது இத்துடன் கூடுதலாக 150 மெகாவாட் மின் உற்பத்திக்கான காற்றாலை அமைப்புகளை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது.
இதுவரை 7726 மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை முடித்திருப்பதாகவும் 2114 மெகாவாட் மின் உற்பத்திக்கான அமைப்புகளை நிறுவும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் தெரிவிக்கிறது. 2025 ஆம் நிதியாண்டு முடிவதற்குள் இந்த கட்டமைப்பு பணிகள் முழுமை பெறும் என கூறியுள்ளது. தற்போதைய சூழலில் இந்த நிறுவனத்தின் காற்றாலை மின் உற்பத்தி திறன் 2,152 மெகாவாட்டாக இருக்கிறது.
2025 ஆம் ஆண்டுக்குள் 10 கிகாவாட் மின் உற்பத்தி என்ற இலக்கை எட்டுவதே ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் நோக்கம் என இதன் தலைமை செயல் அதிகாரியான சரத் மகேந்திரா தெரிவித்துள்ளார். 2030 ஆம் ஆண்டுக்குள் இது 20 கிகாவாட் என்ற அளவை எட்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி நிறுவனத்தை பொருத்தவரை மொத்தமாக காற்றாலை, சூரிய மின்சக்தி மற்றும் நீர்மின் மற்றும் அனல் மின் திட்டங்கள் மூலம் தற்போது 18.2 கிகாவாட் மின் உற்பத்திக்கான திறன்களை கொண்டிருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications