இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் சஜ்ஜன் ஜின்டால் தலைமையிலான JSW குரூப் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு இருந்த சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய ஆட்டோமொபைல் துறை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் JSW குரூப் இத்துறையில் இறங்குவது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
சென்னை ஃபோர்டு தொழிற்சாலை மூடப்பட்டு பல மாதங்களான நிலையில், இத்தொழிற்சாலைக்கு தீர்வு காணப்படாமல் இருக்கும் வேளையில் JSW குரூப் களத்தில் இறங்கியுள்ளது. இதன் மூலம் சென்னை ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் புதிய வேகத்துடன் இயங்கி பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.

JSW குருப் இதுவரையில் ஸ்டீல், மின்சாரம், பெயிண்ட் போன்ற துறையில் மட்டுமே இருந்த வேளையில், ஆட்டோமொபைல் துறையில் இறங்க 2வது முறையாக முயற்சி செய்துள்ளது. சென்னை தொழிற்சாலையை கைப்பற்ற JSW குரூப் மற்றும் அமெரிக்காவின் ஃபோர்ட் உயர்மட்ட நிர்வாகமும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் JSW குரூப், OLA நிறுவனத்தை போலவே 100 சதவீதம் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாக உருவெடுக்கும், ஆனா ஒரு சின்ன வித்தியாசம் எலக்ட்ரிக் கார்.
சென்னை ஃபோர்டு தொழிற்சாலை சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, வருடத்திற்கு 200000 வாகனங்களையும், 3.4 லட்சம் இன்ஜின்களை தயாரிக்கும் திறன் கொண்ட கட்டமைப்பு. ஃபோர்ட் நிறுவனத்தின் வர்த்தக சரிவு காரணமாக ஜூலை 2022 முதல் சென்னை தொழிற்சாலை மூடப்பட்டு உல்ளது. அப்போது முதல் சென்னை ஃபோர்ட் தொழிற்சாலைக்கு புதிய ஓனர்-ஐ தேடி வரும் வேளையில் இன்னும் கண்டுப்பிடிக்க முடியாமல் உள்ளது.
ஃபோர்ட் நிறுவனத்தின் மூடப்பட்ட குஜராத் தொழிற்சாலையை டாடா குழுமம் 725.7 கோடி ரூபாய்க்கு ஜனவரி மாதம் வாங்கியது. சென்னை தொழிற்சாலையை வாங்க பேச்சுவார்த்தை நடந்தாதாக கூறப்படும் வேளையில் எவ்விதமான தீர்வும் எட்டப்படவில்லை. தற்போது JSW களத்தில் குதித்துள்ளது.

JSW குரூப் இதுவரையில் ஆட்டோமொபைல் துறையில் இல்லாத காரணத்தால், சிறப்பான கூட்டணி தேவை குறிப்பாக கார் உற்பத்தி எனில் முன் அனுபவம் அல்லது கூட்டணி அவசியம். இதற்காக JSW குரூப் கடந்த 2 மாதமாக சீனாவின் SAIC மோட்டார் கார்ப் கட்டுப்பாட்டில் இருக்கும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் 48 சதவீத பங்குகளை கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதற்காக JSW குரூப் உயர் அதிகாரிகள் சீனாவுக்கும், SAIC உயர் அதிகாரிகள் இந்தியாவுக்கும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய கட்டத்தை எட்டிய காரணத்தால் JSW குரூப் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
JSW குரூப்பின் இரு பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமான முடிந்தால், சென்னை ஃபோர்டு தொழிற்சாலையில் JSW குருப் தலைமையிலான நிர்வாகம் MG MOTOR-ன் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
JSW குரூப் இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு புனே அருகில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையை 6500 கோடி ரூபாய்க்கு வாங்க முயற்சி செய்து 2019ல் இத்திட்டத்தை கைவிட்டது. இதை தொடர்ந்து சமீபத்தில் ஹூண்டாய் புனே ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையை கைப்பற்ற ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது. இதன் மூலம் JSW ஆட்டோமொபைல் துறைக்குள் இறங்குவது 2வது முயற்சியாகும்.


Click it and Unblock the Notifications