பிரிட்டன் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் பிராண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் MG Motor-ன் கார்கள் இந்தியாவில் அறிமுகமான உடனே ஆட்டோமொபைல் பிரியர்களை கவர்ந்தது, இதேவேளையில் அறிமுகமாக KIA பிராண்ட் கார்களும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது.
இதில் கியா தென் கொரியா நாட்டின் பிராண்டாகும், MG Motor பிரிட்டன் பிராண்டாக இருந்தாலும் இதன் உரிமையாளர் சீன நாட்டின் SAIC நிறுவனம். இந்தியாவில் வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெறித்து ஓடி வரும் வேளையில் MG Motor, KIA நிறுவனத்தின் வெற்றி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கும், சீன முதலீடுகளுக்கும் அதிகப்படியான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் MG Motor இந்தியா நிறுவனம் நாட்டை விட்டு வெளியேற விருப்பம் இல்லாமல் அரசின் விதிமுறைகளுக்கு இணங்க இந்திய நிறுவனமாக மாற முடிவு செய்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி JSW Group-ன் தலைவரான சஜன் ஜின்டால்-க்கு சொந்தமான தனி நிறுவனம் MG Motor India நிறுவனத்தில் 45 - 48 சதவீத பங்குகளையும், அதன் டீலர் மற்றும் இந்திய ஊழியர்கள் இணைந்து 5 சதவீத பங்குகளையும் வாங்க உள்ளதாக தெரிகிறது. இதில் மீதமுள்ள பங்குகளை சீனாவின் SAIC மோட்டார்ஸ் வைத்திருக்க உள்ளது.
இந்த பங்கு விற்பனையின் மூலம் இந்திய அரசின் விதிமுறைகளின் படி ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 51 சதவீத பங்குகள் இந்தியர்கள் கையில் இருந்தால் இந்திய நிறுவனமாக கருதப்படும். இதன் மூலம் சீனாவின் அதிகப்படியாக SAIC மோட்டார்ஸ் 49 சதவீத பங்குகளை வைத்திருக்க உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் அடுத்த 3 முதல் 4 மாதத்தில் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. MG Motor பங்குகள் கைமாறுவதன் மூலம் இந்திய நிறுவனமாக மாறுவதன் மூலம் அடுத்த சில வருடத்தில் MG Motor இந்திய பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிடவும் வாய்ப்பு உள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்காக சாஜன் ஜின்டால் மற்றும் அவருடைய மகன் பார்த் சமீபத்தில் சீனாவுக்கு சென்று SAIC மோட்டார்ஸ் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். SAIC மோட்டார்ஸ் எம்ஜி மோட்டார்ஸ் இந்தியாவில் இதுவரையில் 5000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது, தற்போது 1.2 - 1.5 பில்லியன் டாலர் வரையில் மதிப்பிடப்படுகிறது.
எம்ஜி மோட்டார்ஸ் இந்தியாவில் வருடத்திற்கு சுமார் 50000 கார்களை விற்பனை செய்யும் நிலையில், இந்திய கார் விற்பனை சந்தையில் 1.26 சந்தை பங்கீட்டை கொண்டு உள்ளது. 2019ல் இந்தியாவில் துவங்கப்பட்ட எம்ஜி மோட்டார்ஸ் 1,46,000 கார்களை விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications