இந்தியாவின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான JSW ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் டிசம்பர் 31,2020 உடன் முடிந்த காலாண்டில் சுமார் 1300 சதவீதம் வளர்ச்சி அடைந்து 2,669 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் வெறும் 187 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அக்டோபர் - டிசம்பர் 2020 காலாண்டில் JSW ஸ்டீல் நிறுவனத்தின் வருவாய் 22,006 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 18,182 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் இந்நிறுவனத்தின் செலவுகள் 18,120 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஸ்டீல் தேவை அதிகரிப்பு
இந்தியாவில் லாக்டவுன் தளர்வுக்குப் பின் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஸ்டீல் தேவை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும் இந்தியாவில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் இந்திய நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளது என JSW ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆட்டோமொபைல் துறை
டிசம்பர் காலாண்டில் இந்தியா ஆட்டோமொபைல் சந்தையின் உற்பத்தி பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கிராமம் மற்றும் ஊரகப் பகுதிகளில் பைக், கார், மற்றும் டிராக்டர் தேவை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி அதிகரித்து ஸ்டீலுக்கான தேவையும் உயர்ந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி
இதேபோல் இந்திய ரியல் எஸ்டேட் துறையும் மத்திய அரசின் பல்வேறு சலுகை மற்றும் அறிவிப்பாலும் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இத்துறையிலும் ஸ்டீல் தேவை அதிகரித்துள்ளது. மேலும் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்க உள்ள பட்ஜெட் அறிக்கையிலும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
JSW ஸ்டீல் பங்குகள்
2020 மார்ச் லாக்டவுனில் இருந்து மீண்டு வரும் JSW ஸ்டீல் நிறுவனம் 132.50 ரூபாயில் இருந்து தற்போது 377.70 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் ஜனவரி மாதத்தில் அதிகளவிலான ஏற்ற இறக்கங்கள் உடன் JSW ஸ்டீல் நிறுவனப் பங்குகள் அதிகப்படியாக 405 ரூபாய் வரையில் உயர்ந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 396 ரூபாயில் துவங்கி அதிகப்படியாக 372.20 ரூபாய்க்கு சரிந்து வர்த்தக முடிவில் 3.97 சதவீத சரிவில் 377.70 ரூபாய்க்கு சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications