வருமான வரி செலுத்துபவர்கள், வரி விலக்கு பெறுபவர்கள் இந்த ஜூலை மாதத்தில் மிக முக்கியமான தேதிகளைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். நாளை ஜூலை மாதம் பிறக்கவிருப்பதால் ஒரு சில பணிகளை முன்கூட்டியே முடிப்பது தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்படும் பிரச்சனையை தடுக்கும். இதனால் வரி செலுத்துபவர்கள் அபராதம் மற்றும் வட்டி விதிப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். இந்த பதிவில் எந்தெந்த முக்கியமான காலக்கெடுக்கள் ஜூலை மாதத்தில் வருகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ஜூலை 7: வருமானவரிச் சட்டம் 2025 பிரிவு 392(1) அல்லது 393(1)-இன் கீழ் ஒரு சிலருக்கு காலாண்டு அடிப்படையில் வரி செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கும். எனவே அப்படி அனுமதி பெற்றவர்கள் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு வரையில் பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை ஜூலை 7-ஆம் தேதி அன்று டெபாசிட் செய்ய வேண்டும். இந்த குறிப்பிட்ட தேதியில் ஜூன் 2026-இல் முடிவடைந்த காலாண்டின் வரியை, வருமான வரித்துறையின் படிவங்களைப் பயன்படுத்தி அப்லோட் செய்ய வேண்டும்.
படிவம் 127: வருமான வரிச் சட்டம் 2025-இன் கீழ் ஒருசில பொருட்களை வாங்கும் நபர்களுக்கு டிசிஎஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இது போன்ற நபர்களிடமிருந்து பெறப்பட்ட படிவம் 127-ஐ அப்லோட் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 7.

படிவம் 121: ஜூன் 2026 ஆம் ஆண்டில் முடிவடைந்த காலாண்டில் பெறப்பட்ட படிவம் 121-ஐ சமர்ப்பிப்பதற்கும் இதுதான் கடைசி தேதி.
ஜூலை 15: ஜூன் 2026-ஆம் ஆண்டுக்கான டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் வரியை சலான் இல்லாமல் செலுத்தும் அரசு அலுவலகங்கள் ஜூலை 15-ஆம் தேதிக்குள் படிவம் 137-ஐ வருமானவரித் துறையின் இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
படிவம் 132 (TDS சான்றிதழ்): வருமானவரிச் சட்டம் 2025, பிரிவு 393-இன் கீழ், 2026-ஆம் ஆண்டின் மே மாதம் பிடித்தம் செய்யப்பட்ட வரிக்கான டிடிஎஸ் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆகும்.
படிவம் 147: ஒரு சில டீலர்கள் வெளிநாட்டுக்கு பணப்பரிமாற்றம் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் 2026-ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முடிவடைந்த காலாண்டுக்கான அறிக்கையை படிவம் 147-ஐ கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அதற்கும் ஜூலை 15 தான் டெட்லைன்.
படிவம் 148: வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 147(1)(b)-இன் படி, IFSC-இன் கீழ் செயல்படும் நிறுவனங்கள் 2026-ஆம் ஆண்டின், ஜூன் காலாண்டில் வெளிநாட்டுக்கு பண பரிமாற்றம் செய்திருந்தால், அது குறித்த விவரங்களை படிவம் 148-ஐ கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். இதை செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆகும்.
படிவம் 1: ஜூன் மாதத்தில் பங்குச்சந்தை குறியீடுகளில் மாற்றம் செய்திருக்கும் வாடிக்கையாளர்கள், அது குறித்த விபரங்களை படிவம் ஒன்றைக் கொண்டு வருமானவரித்துறை இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜூலை 31: வரி செலுத்துவோர் இந்த தேதியை மறக்க வாய்ப்பில்லை. வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31. வரி செலுத்தும் தனி நபர்கள் ஐடிஆர் படிவம் 1 மற்றும் ஐடிஆர் படிவம் 2 ஆகியவற்றை கொண்டு 2027-ஆம் மதிப்பீட்டாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இதுதான் டெட்லைன்.
எனவே வரி செலுத்துவோர் கடைசி நேரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை தவிர்த்து அபராதம் இன்றி வரி செலுத்த முன்கூட்டியே முக்கியமான தேதிகளை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது!


Click it and Unblock the Notifications
