மும்பை: ஆனந்த் அம்பானியின் திருமண சங்கீத் நிகழ்ச்சியில் பாடுவதற்காக புகழ்பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் மும்பைக்கு வந்துள்ளார். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு வரும் 12ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற இருக்கிறது.
முகேஷ் அம்பானி குடும்பத்தின் செல்ல மகனான ஆனந்த் அம்பானிக்கும், புகழ்பெற்ற தொழிலதிபர் வீரென் மெர்சண்டின் மகள் ராதிகா மெர்சண்டுக்கும் ஜூலை 12ஆம் தேதி திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் மையத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டு வருகின்றன.

திருமணத்தின் சங்கீத் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி ஜஸ்டின் பீபர் மும்பைக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டு மும்பையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார். ஆனந்த் அம்பானியில் திருமண நிகழ்ச்சியில் பாடுவதற்காக ஜஸ்டின் பீபருக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்களை அம்பானி குடும்பம் வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் நடைபெற்ற ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய மூன்று நாட்கள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் புகழ்பெற்ற அமெரிக்க பாடகி ரிஹானா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அதேபோல ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் நடந்த மூன்று நாட்கள் திருமணத்திற்கு முந்தைய பார்ட்டியில் புகழ்பெற்ற பாப் பாடகி கேட்டி பெர்ரி கலந்துகொண்டார். இந்த நிலையில் திருமண நிகழ்ச்சிக்காக தற்போது ஜஸ்டின் பீபர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
ஆனந்த் மற்றும் ராதிகா திருமண நிகழ்வுகளை மிக ஆடம்பரமான முறையில் நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை நீதா அம்பானியே கவனித்து வருகிறார். அண்மையில் கூட குஜராத் திருமண பாரம்பரிய நிகழ்ச்சியான மமேரோ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதாவது மணமகளின் தாய்மாமன் இனிப்புகள் மற்றும் பல்வேறு பரிசு பொருட்களுடன் வருகை தரக்கூடிய ஒரு நிகழ்வு இது. இதில் அம்பானியின் மொத்த குடும்பமும் உற்சாகமாக கலந்து கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
மும்பையில் உள்ள ஜியோ சென்டரில் ஜூலை 12ஆம் தேதி திருமணம் , அதனை தொடர்ந்து 13-ஆம் தேதி சுப ஆசீர்வாத நிகழ்ச்சி, 14ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெற இருக்கின்றன. இதற்காக உலகெங்கிலும் இருந்து பல்வேறு பிரபலங்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஆனந்த் மற்றும் ராதிகா ஆகிய இருவரும், முகேஷ் மற்றும் நீதா அம்பானி ஆகியோருடன் பல்கார் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தர் வித்யா மந்திரிருக்கு சென்று, ஏழைகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைத்தனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications