கேரளா: சில நேரம் வாழ்க்கையில் நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் நம்மை மிகப்பெரிய வெற்றிக்கு அழைத்து செல்லும். அப்படி வழக்கறிஞர் பணியில் இருந்த ஒரு நபர் திவாலான ஒரு வங்கியை வாங்கி தற்போது 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள வங்கியாக உயர்த்தி இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.
தென்னிந்தியாவை சேர்ந்த வங்கி துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய நபர் தான் கே.பி. ஹார்மிஸ்.

கேரள மாநிலத்தை சேர்ந்த இவரது முழுப்பெயர் குலாங்கரா பாவ்லோ ஹார்மிஸ். ஆனால் பரவலாக கே.பி.ஹார்மிஸ் என அறியப்படுகிறார். 1917 ஆம் ஆண்டில் கேரளாவில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அரசு பள்ளியில் படிப்பை முடித்து, சட்டம் பயின்றார்.
பின்னர் கேரள மாநிலம் பெருவம்பூரில் உள்ள முன்சிஃப் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார் . 1944 ஆம் ஆண்டில் திருவாங்கூர் ஃபெடரல் பேங்க் லிமிடெட் கிட்டத்தட்ட திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.
அப்போதுதான் கே.பி.ஹார்மஸ்க்கு நாம் ஏன் இந்த வங்கியை வாங்க கூடாது எனற யோசனை தோன்றியது. உடனடியாக தன்னுடைய சட்ட தொழிலை கைவிட்ட அவர் இந்த வங்கியில் கணிசமான பங்குகளை வாங்கி தனக்கு சொந்தமாக்கிக் கொள்வதற்கான பணிகளில் ஈடுபட தொடங்கினார். 5,000 ரூபாயில் இருந்து 71,000 ரூபாய் என படிப்படியாக பங்குகளை வாங்கி வங்கியை தனது கட்டுக்குள் கொண்டு வந்தார்.
1945 ஆம் ஆண்டில் வங்கியின் தலைமையகத்தை நீடும்புரத்தில் இருந்து கேரளாவின் ஆலுவா பகுதிக்கு மாற்றினார். இதனை அடுத்து திருவாங்கூர் ஃபெட்ரோல் பேங்க் என இருந்த பெயரை ஃபெடரல் வங்கி என மாற்றம் செய்தார்.
அந்த காலகட்டத்தில் கேரளாவில் சிட் பண்டு திட்டம் பிரபலமாக இருந்தது. இதனை ”குறி” என் அந்த பகுதி மக்கள் அழைத்தனர். 1949 ஆம் ஆண்டில் ஃபெடரல் வங்கியின் உரிமத்தை பெற்ற பிறகு விவசாயிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு குறி திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த புதுமையான அணுகுமுறை விவசாயிகளுக்கு தேவையான நிதி உதவியை வழங்கியது.
விவசாயிகளுக்கு பிடித்த வங்கியாக ஃபெடரல் வங்கி மாறியது. இவரது தலைமையில் ஃபெடரல் வங்கி பல இடங்களில் கிளைகளை பரப்பத் தொடங்கியது. சிறந்த நிர்வாகத் தன்மை மற்றும் புதுப்புது திட்டங்களை அறிவிப்பது என தீவிரமாக செயல்பட்டு வந்த ஹார்மிஸ் 1968 ஆம் ஆண்டில் கேரளாநில் திவாலான மேலும் ஐந்து வங்கிகளான சாலக்குடி வங்கி, கொச்சின் யூனியன் வங்கி, மார்த்தாண்டம் வங்கி, செயின்ட் ஜார்ஜ் யூனியன் வங்கி மற்றும் தி ஆலப்பி வங்கி ஆகியவற்றை வாங்கி ஃபெடரல் வங்கியோடு இணைத்தார்.
1970 ஆம் ஆண்டில் முழு நேர வணிக ரீதியான வங்கியாக மாறியது. இதனை அடுத்து தேசிய அளவில் வங்கி விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஃபெடரல் வங்கியின் கிளைகள் திறக்கப்பட்டன.
1977 ஆம் ஆண்டில் 276 கிளைகளுடன் ரூ.1 கோடி என்ற மூலதனத்தைக் எட்டியது ஃபெடரல் வங்கி. தற்போது ஃபெடரல் வங்கியின் மதிப்பு 40,000 கோடி ரூபாய் ஆகும். நாடு முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட கிளைகளை இந்த வங்கிக் கொண்டிருக்கிறது. 1988ஆம் ஆண்டிலேயே ஹார்மஸ் இறந்து விட்டாலும் அவர் உருவாக்கிய வங்கி தொடர்ந்து செயல்பட்டு பல உயரங்களை எட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications