பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடிய நிலையில், கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் பிரபலமான ஒரு துணிக்கடையில் 10 வருடத்திற்கு அதிகமாகப் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இக்கடையின் உரிமையாளர் பொங்கல் பரிசாகப் புது பைக் கொடுத்து அசத்தியுள்ளது.
இன்றைய போட்டி மிகுந்த வர்த்தகச் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் திறமையான ஊழியர்கள் கட்டாயம் வேண்டும். இதை உணர்த்தும் வண்ணம் சமீபத்தில் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அதிகப்படியான சலுகைகள், பரிசுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி-யில் இயங்கி வரும் JKR டெக்ஸ்டைல்ஸ் துணி கடையில் சுமார் 20க்கும் அதிகமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இக்கடையில் பணியில் சேருவோர் 1-2 வருடத்திலேயே பணியை விட்டு வேறு இடத்திற்குச் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது.
இந்த நிலையில் இக்கடையில் சில ஊழியர்கள் 10 வருடத்திற்கு அதிகமாகப் பணியாற்றி வரும் நிலையில், இவர்களைப் பாராட்டவும், பெருமைப்படுத்தவும் இக்கடை உரிமையாளர் ரமேஷ் நினைத்தார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஊழியர்களுக்குப் புதிய பைக் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்தப் பரிசை ஊழியர்களின் குடும்பத்தினரை அழைத்து இந்த மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்துள்ளார் JKR டெக்ஸ்டைல்ஸ் ரமேஷ். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மக்கள் மத்தியில் JKR டெக்ஸ்டைல்ஸ் தனி மதிப்பை பெற்றுள்ளது.
காலம் சக்கரம் போன்றது என்பதற்கு இதைவிடச் சரியான உதாரணம் இருக்க முடியாது, 10-15 வருடங்களுக்கு முன்பு கொடுக்கும் சம்பளத்திற்கு ஊழியர்களைப் பிழிந்து எடுப்பது தான் முதலாளிகளின் வழக்கமாக இருக்கும். ஆனால் இன்று காலம் மாறி ஊழியர்களைத் தக்க வைக்க முதலாளிகள் போராடும் காலம் வந்துவிட்டது.
சந்தையில் போட்டி அதிகமாகும் போது இதுபோன்ற மாற்றங்கள் கட்டாயம் நடக்கும். இன்றைய காலகட்டத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும் திறமையான ஊழியர்கள் கட்டாயம் தேவை, முதலாளி சரியில்லாமல் இருந்தால் கூடப் பல இடத்தில் ஊழியர்களின் திறமை மூலம் வெற்றி அடைந்த சாம்ராஜ்ஜியங்களும் உண்டு.
இதேபோல் முதலாளி மட்டும் திறமையாக இருந்துகொண்டு குறைவான சம்பளத்தில் ஊழியர்கள் கிடைக்கிறார்கள் என்ற காரணத்திற்காகத் திறமையற்ற ஊழியர்களை நியமித்து வீழ்ந்த வர்த்தகமும் உண்டு. இந்த இரண்டு ஆப்ஷனில் எதைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது ஒரு முதலாளி கையில் தான் உள்ளது.


Click it and Unblock the Notifications