இந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனையாளராகவும், ஏற்றுமதி மூலம் அதிகப்படியான வர்த்தகத்தை பார்க்கும் கல்யாண் ஜூவல்லர்ஸ் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இன்போசிஸ், டிசிஎல், ரிலையன்ஸ், அதானி, டாடா குழும நிறுவனங்களின் முடிவுகளுக்கு இணையாக கல்யாண் ஜூவல்லர்ஸ் காலாண்டு முடிவுகள் டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது.
இந்தியாவில் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ள நிலையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் போன்ற முன்னணி பிராண்ட் கடைகள் அதிகப்படியான லாபத்தை பதிவு செய்யும் என எதிர்பார்த்த காரணத்தால் இன்று காலாண்டு முடிவுகளை வெளியிடும் கல்யாண் ஜூவல்லர்ஸ் பெயர் டிவிட்டரில் டிரெண்டாகியுள்ளது.

2023 ஆம் நிதியாண்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா நான்காவது காலாண்டில் அதாவது மார்ச் காலாண்டில் 71 கோடி ரூபாய் அளவிலான நிகர லாபத்தைப் பதிவுசெய்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே மார்ச் காலாண்டில் 72 கோடி ரூபாய் லாபத்தை ஒப்பிடுகையில் 1.6 சதவீத சரிவாகும். இதன் மூலம் ஒரு நாளுக்கு 78 லட்சம் ரூபாயை லாபமாக மார்ச் காலாண்டில் பெற்றுள்ளது.
2023 ஆம் நிதியாண்டின் மார்ச் காலாண்டில் கல்யாண் ஜூவல்லர்ஸ்-ன் ஒருங்கிணைந்த வருவாய் 18.4 சதவீதம் அதிகரித்து 2,857 கோடியில் இருந்து 3,381.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் EBITDA அளவு 17.5 சதவீதம் அதிகரித்து 256.7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டில் 218.5 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிர்வாக குழுவின் முடிவின் படி 10 ரூபாய் முக மதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் அதன் பங்குதாரர்களுக்கு 5% அதாவது 0.50 ரூபாய் தொகையை இறுதி ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் 2023 ஆம் நிதியாண்டு முழுவதும் கல்யாண் ஜூவல்லர்ஸ் மொத்தமாக 14,071 கோடி ரூபாய் வருமானத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் 10,818 கோடி ரூபாயாக இருந்தது, இதேபோல் வரிக்கு பிந்தைய லாபத்தில் 432 கோடி ரூபாயை லாபமாக பெற்றுள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் 1.24 சதவீதம் சரிந்து 107.30 ரூபாய் அளவில் வர்த்தகம் முடிந்தது.


Click it and Unblock the Notifications