பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஐடி நகரமாக விளங்கும் பெங்களூரில் இருக்கும் கர்நாடகா அல்லாத பிற மாநிலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் நேற்று வெளியான அறிவிப்பு மூலம் அச்சத்தில் உள்ளனர். சொல்லப்போனால் பலர் தாங்கள் வேலை இழக்கக் கூடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் முக்கிய பொருளாதார பகுதி என்றால் அது பெங்களூர் தான், இந்த நகரத்தை வைத்துத் தான் மாநிலத்தின் பெரும் பகுதி வேலைவாய்ப்பு, முதலீடு, வளர்ச்சி மையம் கொண்டு உள்ளது. இப்படியிருக்கும் பெங்களூர் பொருளாதாரத்தில் பெரும் பகுதி வகிப்பது ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் துறை.

கர்நாடகா மாநிலத்தில் தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் மேலாண்மை நிலைகளில் 50 சதவீதமும் மற்றும் மேலாண்மை அல்லாத நிலைகளில் 75 சதவீத ஊழியர்களைக் கர்நாடகாவைச் சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும் என்ற மசோதாவைக் கர்நாடகா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதா தான் பெங்களூர் ஐடி ஊழியர்களின் அச்சத்திற்கு முக்கிய காரணமாகும். கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 'கர்நாடக மாநில தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர்வாசிகளை நியமிக்கும் வேலைவாய்ப்பு மசோதா 2024 என்ற புதிய மசோதா ஒப்புதல் பெற்றது. இந்த மசோதா தற்போது நடைபெறும் கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் மறுமுனையில் குறைந்தபட்சம் நிர்வாக நிலைகளில் குறைந்தது 25% மற்றும் நிர்வாக அல்லாத நிலைகளில் 50% கன்னடர்கள் இருக்க வேண்டும். இதனை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது, இதனால் சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அடையும் போது தான் முழு விபரம் தெரிய வரும்.
பெங்களூரில் தெருவுக்குத் தெரு இருக்கும் ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனத்தில் அதிகப்படியான ஊழியர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான். இப்படியிருக்கும் போது நிர்வாக நிலைகளில் இத்தகைய அளவீட்டை வைக்கும் போதும் பிற மாநில ஊழியர்களின் வளர்ச்சி தடுக்கப்படுவதாகப் பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் கன்னடர்களுக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் ஒரு விஷயம், தற்போது அறிவிக்கப்பட்ட 50 சதவீதம், 75 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெங்களூர் ஐடி துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், குறிப்பாக நிர்வாக அல்லாத பணிகளில் 75 சதவீதம் வரையிலான ஊழியர்கள் கன்னடர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ள விதி கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
இதை நிறுவனங்கள் எப்படிக் கையாளுகிறது என்பது தான் தற்போதைய முக்கியமான கேள்வி. இந்த பிரச்சனைகளைக் களையப் பெங்களூர் ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அனைத்தும் அருகில் இருக்கும் நகரங்களுக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகம். குறிப்பாகப் பெங்களூர் தென் பகுதியில் இருக்கும் ஓசூர், அனந்தபூர் ஆகியவை ஐடி ஹப் ஆக மாறும் வாய்ப்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications