காரைக்கால் துறைமுகத்தை கையகப்படுத்தும் பணியை முடித்துவிட்டதாக அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் (APSEZ) சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்தியாவின் 2வது பெரிய கோடீஸ்வரராக இருக்கும் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் துறைமுக வர்த்தக பிரிவு தான், அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ இந்நிறுவனம் ஏற்கனவே முந்திரா துறைமுகத்தை கைப்பற்றி அதிகப்படியான வர்த்தகத்தை பார்த்து வரும் வேளையில் தற்போது தமிழ்நாட்டில் தனது துறைமுக வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
இதன் மூலம் அதானி குழுமம் தென்னிந்தியாவிலும் தனது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
காரைக்கால் துறைமுகம்
காரைக்கால் துறைமுகம் இந்தியாவின் தென் கிழக்குக் கடற்கரையில் வருடம் முழுவதும் வர்த்தகம் செய்யக்கூடிய முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் (NCLT) காரைக்கால் துறைமுகத்திற்கான அதானி குழுமத்தின் தீர்மானத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து தற்போது கைப்பற்றப்பட்டு உள்ளது.
NCLT அமைப்பு
NCLT அமைப்பு ஒப்புதல் அளித்த திட்டத்தின் கீழ், அதானி நிறுவனம் சுமார் 1,485 கோடி ரூபாய் அளவிலான தொகையை காரைக்கால் துறைமுகத்திற்கு கடன் அளித்த நிதி அமைப்புகள் மற்றும் வங்கிகளுக்கு அளிக்க உள்ளது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
இந்த நிலையில் காரைக்கால் துறைமுகத்திற்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்காக வரும் வாடிக்கையாளர்களுக்கான தளவாடச் செலவைக் குறைப்பதற்காக, உள்கட்டமைப்பை மேம்படுத்த அதானி போர்ட்ஸ் 1500 கோடி ரூபாய் கைபற்றல் தொகையை தாண்டி சுமார் 850 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த உள்ளதாக அதானி போர்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டு இலக்கு
அடுத்த ஐந்து ஆண்டுகளில் காரைக்கால் துறைமுகத்தின் திறனை இரட்டிப்பாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம், மேலும் அதை multipurpose துறைமுகமாக மாற்றுவதற்கு கொள்கலன் முனையத்தையும் புதிதாக சேர்க்க உள்ளோம் என்றும் கரண் அதானி தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
கரண் அதானி
கரண் அதானி தலைமை வகிக்கும் அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ இந்தியாவில் மொத்தம் 14 துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் இயக்குகிறது. இதில் புதிதாக கைப்பற்றியுள்ள காரைக்கால் துறைமுகம் 2022-23 ஆம் நிதியாண்டில் 10 மில்லியன் டன் சரக்குகளை நிர்வகித்துள்ளது.


Click it and Unblock the Notifications