கர்நாடக மாநிலத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் டாக்சி நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன. ஐடி தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் பெங்களூருவில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பைக் டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, பைக் டாக்சி ஓட்டுனர்கள், பெண் பயணிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவங்களும் அரங்கேறின. இதனால், பைக் டாக்சிக்கு தடை விதிக்க வேண்டுமென போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, கடந்த 2021ஆம் ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பைக் டாக்சி சேவைக்கு கர்நாடக அரசு அனுமதி வழங்கியது. ஆனால், பயணிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், கடந்த 2024இல் அந்த அனுமதியை வாபஸ் பெற்று, பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், ஜூன் 16ஆம் தேதி (நேற்று) முதல் கர்நாடகாவில் பைக் டாக்சிக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதுதொடர்பான வழக்கின் போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பைக் டாக்சி சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகாவில் மட்டும் அதற்கு விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. பெரிய வாகனங்களை விட, இருசக்கர வாகனங்கள் தான் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. எனவே, வாடகை வாடகை அடிப்படையில் இருசக்கர வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்" என வாதிட்டார். மனுதாரர் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
1.20 லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம்: இந்நிலையில் தான், கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சி சேவை முடிவுக்கு வந்தது. இதனால், பைக் டாக்சி சேவையை வழங்கிய 1.20 லட்சம் ஓட்டுநர்களும், அதனை நம்பியிருந்த மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குமுறுகின்றனர். நேற்று இரவோடு இரவாக இந்த தடை அமலுக்கு வந்துள்ளதால், இன்று முதல் பல லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலர் பெற்றோர்களுக்கு தெரியாமல் பைக் டாக்சி ஓட்டி சம்பாதித்து வருகின்றனர்.
தடையை மீறி பைக் டாக்ஸி ஓட்டிய வாகனங்கள் பறிமுதல் : மேலும், தடையை மீறி இயக்கப்படும் பைக் டாக்சி வாகனங்களை வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அத்துமீறி பைக் டாக்சி ஓட்டியதாக இதுவரை 103 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்றில் இருந்தே ராஜாஜிநகர், யஷ்வந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி பைக் டாக்சி சேவை வழங்கியதை உறுதி செய்த பிறகே வாகனங்கள் பறிமுதல் மற்றும் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
பார்சல் சேவைக்கு மாறிய ரேபிடோ : இந்நிலையில் தான், ரேபிடோ நிறுவனம் பைக் டாக்சி சேவையை நிறுத்திவிட்டு, பார்சல் சேவையை தொடங்கியுள்ளது. அதாவது, ரேபிடோ மற்றும் உபர் நிறுவனங்கள் தங்களது செயலியில் பைக் டாக்ஸி விருப்பத்தை நீக்கியுள்ளன. அதற்கு பதில் 'பைக் பார்சல்' அல்லது 'மோட்டோ கூரியர்' என்ற வேறு சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ரேபிடோ, ஓலா, உபர் ஆகிய மூன்று நிறுவனங்களுமே பார்சல் டெலிவரி சேவைகளை வழங்குகின்றன. இதனால், பிரபல நிறுவனங்களின் பார்சல் சேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
கர்நாடக மாநிலம் முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர்கள், பைக் டாக்ஸி சேவைகளை முக்கிய வருமானமாக நம்பியுள்ளனர். ரேபிடோ மூலம் சுமார் 75% பேர் இந்த தளம் மூலம் சம்பாதிக்கின்றனர். இதன் மூலம் சராசரி மாத வருமானம் ரூ.35,000 கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பெங்களூருவில் மட்டும் பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.700 கோடிக்கு மேல் வருமானம் செலுத்தியுள்ள நிலையில், ரூ.100 கோடி ஜிஎஸ்டியும் செலுத்தியுள்ளது.
எச்சரிக்கும் ரேபிடோ : இதுதொடர்பாக, ரேபிடோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூன் 16, 2025 முதல், கர்நாடகாவில் எங்கள் பைக் டாக்ஸி சேவைகள், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க நிறுத்தப்படுகிறது. உங்களுக்குப் பிடித்த பைக் டாக்சிகளை விரைவில் மீண்டும் சாலைக்குக் கொண்டுவர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இப்படி சேவைகளை நிறுத்துவது என்பது தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும்" என்று ரேபிடோ எச்சரித்துள்ளது.
பைக் டாக்சி ஓட்டுபவர்கள் பலர் மாணவர்களாக உள்ளனர். எங்களில் சிலர் குடும்பங்களுக்கு உணவளிக்க 7 நாட்களும், ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணிநேரமும் வேலை செய்கிறோம். நகரத்தை நகர்த்துவதற்காக நாங்கள் கடுமையான வெயில், கனமழை மற்றும் போக்குவரத்து நெரிசலிலும் சவாரி செய்கிறோம். பைக் டாக்ஸிகள் வருமானம் அல்ல. அவைதான் எங்கள் வாழ்வாதாரம் என்று பாதிக்கப்பட்ட பைக் டாக்சி ஓட்டுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications