கர்நாடக மாநில அரசு 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் சித்தராமையா இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மதுபானம் அருந்துவோருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், மதுபானங்களின் விலையை உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுபானம் குடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்று தொடர்ந்து விளம்பரப்படுத்தப்படும் இதேவேளையில், நாட்டின் பெரும்பாலான மாநில அரசுகள் மதுபான விற்பனை மூலம் அதிகப்படியான வருமானத்தை வரியின் வாயிலாக பெற்று வருகிறது. இதில் கர்நாடக மாநிலமும் ஒன்று.

இன்று தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக மாநில பட்ஜெட் அறிக்கையில் சித்தராமையா அண்டை மாநிலங்களின் மதுபான விலைக்கு இணையாக கர்நாடகாவின் மதுபான விலையை மறுபரிசீலனை செய்து புதிய விலை நிர்ணயிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு மூலம் பெரும்பாலான மதுபானத்தின் விலை அதிகரிக்க கூடும்.
அண்டை மாநிலங்களின் விலைக்கு இணையாக மதுபான விலையை நிர்ணயிப்பதன் மூலம், மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மாநில அரசு, மதுபான விற்பனையின் மூலம் கிடைக்கும் கலால் வரி வருவாயை அதிகரிப்பதில் தீவிரமாக உள்ளதை இந்த பட்ஜெட் அறிவிப்பு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
கடந்த நிதியாண்டில் கலால் வரி வசூல் 36,500 கோடி ரூபாயாக இருந்தது என்று தெரிவித்த கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா,
அடுத்த நிதியாண்டில் கலால் வரி வசூல் 40,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், இதை தொடர்ந்து இயக்கவும், இதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்கவும் வரி வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் மதுபானம் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது கர்நாடக அரசு.
இந்த அறிவிப்பு 'குடி'மக்களுக்கு சோகமான செய்தியாக இருந்தாலும், இந்த பட்ஜெட்டை பலரும் பாராட்டும் வகையில் மற்றொரு அறிவிப்பு வந்துள்ளது.
கர்நாடக மாநில அரசு 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த முதலமைச்சர் சித்தராமையா திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலையை அதிகபட்சமாக ரூ.200 ஆக நிர்ணயக்கும் கொள்கையை அறிவித்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இது மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கும் பொருந்தும் என்பது தான். இந்த முடிவை மக்கள் பாராட்டி வருகின்றனர், இதேவேளையில் திரையரங்குகளில் டிக்கெட் விலை குறைப்பது சித்தராமையா-வின் 2வது முறை முயற்சியாகும்.


Click it and Unblock the Notifications