கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று 2025-26ஆம் நிதியாண்டுக்கான அம்மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்களும், அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் பாராட்டும் வகையில் முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் செயல்படும் திட்டத்தைப் போலவே கர்நாடக மாநிலத்திலும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் முட்டை வழங்கியதன் மூலம் மாணவர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது என கர்நாடக அரசு உறுதி செய்துள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த நிதியாண்டிலும் இந்த திட்டத்திற்குக் கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்யக் கர்நாடக அரசு உறுதியளித்துள்ளது. மேலும் இத்திட்டம் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கவும், பிள்ளைகள் கல்வி பெறுவதை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
தற்போது இத்திட்டத்தின் கீழ் சுமார் 53 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு வாரத்திற்கு இரண்டு முறை முட்டை அல்லது வாழைப்பழம் வழங்கப்பட்டு வரும் வேளையில் இதை விரிவுபடுத்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக கர்நாடக அரசு, விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை உதவியுடன், இந்த திட்டம் வாரத்திற்கு ஆறு நாட்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
அதாவது அரசு பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்களுக்கும் பள்ளியில் முட்டை அல்லது வாழைப்பழம் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.1,500 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் தற்போது அரசு பள்ளியில் குழந்தைகளுக்குச் சூடான பாலில் ராகி பவுடர் கலந்து கூழ் அளிக்கப்பட்டு வருகிறது. இது வாரத்திற்கு மூன்று நாட்கள் வழங்கப்பட்ட நிலையில், இனி ஐந்து நாட்களாக நீட்டிக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
இதற்காக மொத்தம் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் செலவில் 25 சதவீதத்தை மாநில அரசு ஏற்கும், மீதமுள்ள 75 சதவீதத்தை ஸ்ரீ சத்ய சாய் அன்னபூர்ணா அறக்கட்டளை ஏற்பதாக தெரிவித்தார். இந்த அறக்கட்டளை சாய் ஷூர் ராகி பவுடரை வழங்குவதாக பட்ஜெட் தாக்கலின் போது முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications