கர்நாடக மாநிலம் முழுவதும் திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைத்து மக்கள் திரைப்படத்தை அதிகம் பார்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் இன்று அம்மாநில பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு, 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மூலம் இந்தியாவில் 16 முறை மாநில பட்ஜெட்-ஐ தாக்கல் செய்த பெருமையையும், சாதனையையும் பெற்றுள்ளார்.

இந்த பட்ஜெட்டை பலரும் பாராட்டும் வகையில் அம்மாநிலத்தில் இருக்கும் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலையை அதிகபட்சமாக ரூ.200 ஆக நிர்ணயக்கும் கொள்கையை கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இது மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கும் பொருந்தும் என்பது தான்.
சமீப காலங்களில் சினிமா டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்து, சாதாரண மக்கள் திரைப்படம் பார்ப்பதை பெரிய அளவில் குறைந்துள்ளது, இதனால் மக்கள் அதிகளவில் OTT பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, அனைத்து மக்களும் திரைப்படங்களை பார்த்து மகிழ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சித்தராமையாவின் முந்தைய ஆட்சியிலும் இதேபோன்ற கட்டண குறைப்பை கொண்டுவரப்பட்டது, ஆனால் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வென்றனர். இதனால், இது அமல்படுத்த முடியாமல் போனது.
தற்போதைய சித்தராமையா அரசு, பொதுமக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த கொள்கையை மீண்டும் கொண்டு வந்துள்ளது. பெங்களுரில் குடும்பமாக 4 பேர் படம் பார்க்க வேண்டும் என்றால் 2500 முதல் 3500 ரூபாய் வரையில் செலவாகும். தற்போது அறிவித்துள்ள கட்டண குறைப்பு மூலம் 1000 முதல் 1500 ரூபாய் இருந்தாலே போதுமானது.
மேலும் இந்த பட்ஜெட்டில் கன்னட திரைப்பட துறையை வலுப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை மாநில அரசு இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. திரைப்பட தயாரிப்பை ஒரு அங்கீகரிப்பட்ட தொழிலாக அறிவிப்பது மூலம் முதலீடுகளை ஈர்ப்பது எளிதாகி இத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
இதேபோல் கர்நாடக அரசு சொந்தமாக ஓடிடி (OTT) தளத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த தளம், கன்னட திரைப்படங்களை மக்கள் மத்தியில் அதிகம் கொண்டு சென்று, டிஜிட்டல் சந்தையில் போட்டியை சமாளிக்கும் வகையில் எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், மைசூரில் உலகத்தரம் வாய்ந்த திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து, 150 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications