பெங்களூரு: ஸ்டார்ட் அப் தலைநகரமாகவும், ஐடி நிறுவனங்களின் மையமாகவும் இருக்கக்கூடிய பெங்களூருவில் நாளுக்கு நாள் மக்கள் நெருக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் பெங்களூரில் நெரிசலை குறைக்கும் பொருட்டு கர்நாடகா மாநில அரசு புதிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
ஜனவரி 30 ஆம் தேதி அன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் பெங்களூருக்கு அருகே ஒருங்கிணைந்த செயற்கைக்கோள் துணை நகரத்தை அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி பெங்களூருக்கு அருகில் பிட்டாடி மற்றும் அரோஹள்ளி ஆகிய பகுதிகளுக்கு இடையில் ஒருங்கிணைந்த செயற்கைக்கோள் துணை நகரம் அமைக்கப்பட இருக்கிறது.

அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக மாநில சட்ட துறை அமைச்சர் ஹெச்.கே. பாட்டில் பெங்களூருவின் முதல் ஒருங்கிணைந்த நகரம் 8032 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
பிட்டாடி மற்றும் அரோஹள்ளி இடையில் இருக்கும் 10 கிராமங்களை ஒன்றிணைத்து இந்த துணை நகரம் உருவாக்கப்படுகிறது , கிரேட்டர் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் இந்த பணிகளை மேற்கொள்ளும் என அவர் கூறினார்.
பிட்டாடி மற்றும் அரோஹள்ளி பகுதிகள் பெங்களூரு மைசூர் நெடுஞ்சாலைக்கு அருகில் ராமநகர மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பெங்களூரில் இருந்து 30 முதல் 50 கிலோமீட்டர் தொலைவிற்கு இருக்கிறது. முன்னதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் ராமநகரா பகுதியை தெற்கு பெங்களூருவாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
ராமநகரா மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்கள் இந்த திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட இருக்கின்றன. இது தவிர பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் நெருக்கத்தை குறைக்கும் வகையில் தேவனஹள்ளி, ஹோஸ்கோடே ஆகிய பகுதிகளிலும் செயற்கைக்கோள் துணை நகரங்களை அமைப்பதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
பெங்களூருக்கு அருகிலேயே துணை நகரங்களை அமைத்து அதனை பெங்களூருடன் சாலை மற்றும் ரயில் நெட்வொர்க் மூலம் இணைப்பதால் வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சி அனைத்து பகுதிகளுக்கும் விரிவடையும் . அத்துடன் பெங்களூருவில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதும் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதும் குறையும் என ஹெச்.கே.பாட்டில் கூறியுள்ளார்.
இதற்காக கர்நாடக மாநில கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது. இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளும் இடம் பெறுவார்கள் என்றும் இவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஒருங்கிணைந்த துணை நகரம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Work – Live- Play என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் சர்வதேச தர நிலைகளுக்கு ஏற்ப இந்த துணைநகரம் அமைக்கப்பட இருப்பதாக ஹெச்.கே பாட்டில் தெரிவித்துள்ளார். இதற்காக சர்வதேச அளவில் ஒப்பந்த புள்ளி கோரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications