பெங்களூர்: கர்நாடகாவில் 400க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ள ஸ்டேடிக் (Statiq) என்னும் நிறுவனம், அப்பகுதியில் இருக்கும் எலக்ட்ரிக் கார் உரிமையாளர்களுக்கு இலவச சார்ஜிங் சேவையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம், தற்போது வீட்டிலேயே சார்ஜ் செய்யும் மக்களையும், நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் மக்களையும் பொது சார்ஜிங் நிலையங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் விதமாக Statiq நிறுவனம் இலவசமாக சார்ஜிங் செய்ய அனுமதிக்கிறது.

டாடா நெக்ஸான் துவங்கி எம்ஜி ZS ஈவி, டாடா டிகோ ஈவி போன்ற பிரபல மாடல்கள் உட்பட பல்வேறு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தங்கள் சார்ஜிங் நிலையங்கள் பொருத்தமானவை என்று ஸ்டேடிக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலவச சார்ஜிங் சேவையைப் பெற, பயனர்கள் ஸ்டேடிக் செயலியைப் பதிவிறக்கம் செய்து, லாக்இன் செய்து, தங்கள் வாகன விவரங்களைச் சேர்த்து, சார்ஜிங் செயல்முறையைத் தொடங்க வேண்டும். இந்த இலவச சேவை மூலம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் Statiq நிறுவனத்தின் சார்ஜிங் ஸ்டேஷனில் சார்ஜிங் செய்யும் போது மறைக்கப்பட்ட கட்டணங்கள் எதுவும் இல்லை என்றும், பயனர்கள் தங்கள் எலக்ட்ரிக் கார்களை பல முறை இலவசமாக சார்ஜ் செய்யலாம் என்றும் ஸ்டேடிக் நிறுவனம் வலியுறுத்துகிறது.
இந்த இலவச சார்ஜிங் சேவை தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும், டாக்சிகள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்கள் இதில் அடங்காது. இருசக்கர வாகனங்களும் Statiq நிறுவனத்தின் பொது சார்ஜிங் தளத்தில் இந்த சலுகையைப் பெற முடியும்.
கிலிடா, சன்பியூல், ஈ-ஃபில் போன்ற ஸ்டேடிக் செயலியில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து சார்ஜர்களிலும் இந்த இலவச சார்ஜிங் சேவையைப் பயன்படுத்த முடியும்.
ஸ்டேடிக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அக்ஷித் பன்சால் இது குறித்து பேசுகையில், "இந்த முயற்சி மூலம், எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதையும், தென்னிந்திய சந்தையில் எங்கள் வர்த்தகத்தை விரைவாக விரிவாக்கம் செய்ய இலக்கை கொண்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
தற்போது, இந்தியாவில் உள்ள முதன்மை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் 7,000க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகன சார்ஜர்களை வைத்துள்ளது Statiq நிறுவனம். இந்த நிலையில் நீங்கள் கர்நாடகாவில் எலக்ட்ரிக் கார் வைத்திருந்தால் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications