பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் குடிநீருக்கான வரியை ஒரு லிட்டருக்கு ஒரு பைசா என்ற வீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி. கே, சிவக்குமார் தெரிவித்துள்ளார். 11 ஆண்டு காலத்திற்குப் பிறகு பெங்களூருவில் குடிநீர் வரி உயர்த்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பெங்களூரு நகருக்கு உட்பட்ட தொகுதிகளை செய்த எம்எல்ஏக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அவர் கூறியுள்ளார். பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் பெங்களூருவில் தண்ணீர் மீதான வரியை ஒரு லிட்டருக்கு 7 முதல் 8 பைசா வரை உயர்த்த வேண்டும் என பரிந்துரை வழங்கியதாம். தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்க வரியை உயர்த்த வேண்டும் என பெங்களூர் குடிநீர் வழங்கல் வாரியம் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் துணை முதலமைச்சர் , 8 பைசா என உயர்த்துவது மக்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் என கூறி தற்போதைக்கு ஒரு லிட்டருக்கு ஒரு பைசா என்ற வீதம் உயர்த்தினால் போதும் என கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு பெங்களூரு நகரத்தில் குடிநீருக்கான வரி உயர்த்தப்படவில்லை என தெரிவித்துள்ள சிவக்குமார் பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து குடிநீரை கொண்டு வந்து மக்களுக்கு விநியோகம் செய்கிறது, இதற்கான செலவினங்கள் 2014 உடன் ஒப்பிடும்போது பல மடங்கு உயர்ந்து விட்டது என கூறியுள்ளார்.
தங்களுடைய செலவினங்கள் அதிகரித்து இருப்பதன் காரணமாக பெங்களூரு குடிநீர் வழங்கல் வாரியம் ஒரு ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து வரியை உயர்த்தாமலேயே பெங்களூர் குடிநீர் வழங்கல் வாரியம் செயல்பட்டு வருகிறது, ஆனால் மற்ற சேவைகளுக்கான கட்டணங்கள் பெருமளவு உயர்ந்துவிட்டன என்பதை அவர் நினைவு கூறியுள்ளார். மின்சார கட்டணம், பேருந்து கட்டணம் ,பால் கட்டணம் உள்ளிட்டவற்றை உயர்த்தி இருப்பதை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இவ்வாறு குடிநீர் வழங்கல் வாரியம் வரியை உயர்த்தினால் மாதம் தோறும் ஒவ்வொரு வீட்டை சேர்ந்தவர்களும் குடிநீர் கட்டணமாக 400 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக செலுத்த வேண்டியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில் பல்வேறு பில்டர்களும் முறைகேடாக தண்ணீர் இணைப்புகளை பெற்று இருப்பதாக தெரிவித்துள்ள சிவக்குமார், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பல பில்டர்கள் முறையான டெபாசிட் கட்டணத்தை செலுத்தாமல் இருக்கின்றனர், அவர்களை கண்டறிந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர்கள் செலுத்த வேண்டிய தொகையை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications