விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமே நீர்தான். வறட்சியான நிலத்தில் பயிர்கள் சாகுபடி செய்வது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனாலும் அந்த வறட்சியே புதிய கண்டுபிடிப்புக்கு வழிவகுத்துள்ளது. மேலும் முயற்சி செய்தால் எதுவும் சாத்தியம் என்று வேளாண் நிபுணர்கள் நிரூபித்து காட்டி உள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் வறட்சியால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ள நிலையில், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் மட்டும் கொஞ்சம் சந்தோஷமாக உள்ளனர். இதன் பின்னணியில் ஒரு ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்பு உள்ளது.

நீர் தேங்கும் திறன் குறைவாக உள்ள ஆழமற்ற மண்ணில் சாகுபடிக்கு ஏற்ற புதிய அதிக அடர்த்தி கொண்ட பருத்தி ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR)-பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் (CICR) ஆராய்ச்சியாளர்கள் சோதனை அடிப்படையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கர்நாடகாவின் யாத்கிர் மற்றும் தார்வாட் பகுதிகளில் அதிக அடர்த்தி கொண்ட பருத்தி ரக பயிர்களை பயிரிட்டு ஆய்வை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் முடிவில் அதிக அடர்த்தி கொண்ட பருத்தி சாகுபடி வெற்றிகரமாகவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயன் அளிப்பதாகவும் அவர்கள் கண்டறிந்தனர். இந்த புதிய ரக பருத்தி வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் வெற்றிகரமாக சாகுபடி செய்யலாம் என்பதோடு, வழக்கமான அளவை காட்டிலும் அதிக மகசூல் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ICAR-CICR இயக்குனர் டாக்டர் ஒய்.ஜி. பிரசாத் கூறுகையில், பொதுவாக ஒரு ஏக்கரில் வழக்கமான பருத்தியை சாகுபடி செய்தால் 3 முதல் 8 குவிண்டால் பருத்தியை அறுவடை செய்யலாம். ஆனால் அதிக அடர்த்தி கொண்ட பருத்தி ரகத்தை சாகுபடி செய்தால் அதனை காட்டிலும் 37 முதல் 50 சதவீதம் அதிக மகசூல் கிடைக்கும்.
வழக்கமாக ஒரு ஹெக்டேரில் 18,000 கன்றுகள் நடப்படும். ஆனால் இந்த சோதனை திட்டத்தின்கீழ்,74,000 கன்றுகள் நடப்பட்டன. கன்றுகள் விரைவாகவும் சீரமைக்கப்பட்டதாகவும் வளரும். எனவே பருத்தி எடுப்பது எளிதாகும்.
கன்றுகள் வறட்சியுடைய பகுதிகளில் இலகுவான மண்ணில் வளர்க்கப்பட்டு, சாகுபடிக்கு ஏற்றதாக கண்டறியப்பட்டது. ஒரு பருத்தி செடி 180 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். ஆனால் புதிய ரக பருத்தி செடி 150 நாட்களில் தயாராகி விடும் என்று தெரிவித்தார்.
மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம் பிரிவின் முதன்மை விஞ்ஞானியும், தார்வாட் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவருமான ராஜேஷ் எஸ்.பாட்டீல் கூறுகையில், இது (அடர்த்தி மிகுந்த பருத்தி) பிடி (BT) அல்ல. புதிய கலப்பின வகை என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய பருத்தி உற்பத்தி அதிகம் நடைபெறும் மாநிலங்களில் இந்த அடர்த்தி மிகுந்த பருத்தி ரகத்தை சாகுபடியை அமல்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications