சித்திரை மாதம் துவங்கிவிட்டால் மாம்பழ பிரியர்களுக்கு குஷியாகிவிடும். ஒரு வருடங்கள் காத்திருந்து தங்களுக்குப் பிடித்த மாம்பழங்களை உண்பதே ஒரு சுகம் தான். நம் ஊரில் எண்ணற்ற மாம்பழ ரகங்கள் உள்ளன. குறிப்பாக நீலம், ஒட்டு, பங்கனப்பள்ளி, செந்தூரம் அல்போன்சா, மல்கோவா இப்படி பல ரகங்களில் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை 1 கிலோவுக்கு ரூ.100 முதல் 250-க்குள் இருக்கும். ஆனால் ஜப்பான் நாட்டை பூர்விகமாகக் கொண்ட மியாசாகி ரக மாம்பழங்கள் உலகிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மியாசாகி மாம்பழங்களின் விலையை பற்றி தெரிந்து கொண்ட விவசாயி ஒருவர் தன் ஊரிலேயே இவற்றை விளைவித்திருக்கிறார்.
கர்நாடகா மாநிலத்தின் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாகப்பா. இவர் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகாவில் நடைபெற்ற தோட்டக்கலை கண்காட்சிக்கு சென்றிருக்கிறார். அங்கு வெவ்வேறு பழங்கள் வைக்கப்பட்டுள்ளன. அப்போது கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மியாசாகி மாம்பழங்களை பார்த்து பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். இதை தன்னுடைய ஊரிலும் விளைவிக்க வேண்டும் என்ற ஆசை நாகப்பாவுக்கு வந்துள்ளது.
உடனே நாகப்பா சற்றும் யோசிக்காமல் டெல்லியில் இருந்து 200 மியாசாகி மரக்கன்றுகளை வாங்கியுள்ளார். அவர் வாங்கும் போது ஒரு கன்றின் விலை 1300 ரூபாய். இது சாதாரண மா கன்றுகளின் விலையை விட பன்மடங்கு அதிகம். இருந்தும் தனக்கு ஆசை ஏற்பட்ட ஒரே காரணத்தினால் எந்த சமரசமும் இன்றி 200 மரக்கன்றுகளை வாங்கியுள்ளார்.

அப்படி கொண்டு வந்த 200 மரக்கன்றுகளையும் குஷ்டகி தாலுகாவில் உள்ள கல் தவாரகேரா கிராமத்தில் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளார். அதில் 20 கன்றுகள் பட்டுப்போனது. மீதமுள்ள 180 மரக்கன்றுகள் மட்டும் செழித்து வளரத் தொடங்கியது. நாகப்பா விளைவித்த 180 மியாசாகி மாம்பழக் கன்றுகளில் இருந்து, இந்த ஆண்டு நல்ல விளைச்சலும் கிடைத்துள்ளது.
சாதாரண மாம்பழங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் மியாசாகி மாம்பழங்களோ அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஜப்பானின் கியுஷு மாகாணத்தில் உள்ள மியாசாகி நகரில் இவை அதிகம் விளைவிக்கப்படுகிறது. அதனால் தான் மியாசாகி மாம்பழம் என்ற பெயரை பெற்றது. இந்த மாம்பழங்களில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம். மேலும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது.அதோடு இவற்றின் சுவை தரமாக இருக்கும் என்றும் சுவைத்தவர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச சந்தையில் மியாசாகி மாம்பழங்களின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் உள்ளது. ஆனால் நாகப்பாவுக்கு எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைத்தாலும் உள்ளூர் சந்தைகளில் மாம்பழங்களுக்கான சரியான விலை கிடைக்கவில்லை. இதனால் கிலோ ஒன்றை ரூ.3,000-த்திற்கு விற்பனை செய்கிறார்.
கொப்பல் சந்தையில் அதற்கு மேல் நாகப்பாவால் விற்பனை செய்ய முடியவில்லை. சரி வெளியூருக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று நினைத்தாலும், அதிலும் பிரச்சனை ஏற்படுகிறது. காரணம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சில சிக்கல்கள் இருக்கிறது. அதோடு போக்குவரத்து வசதிகளும் ஒரு பெரிய தடையாக இருக்கிறது. "நிறைய போராட்டங்களை சந்தித்து மியாசாகி ரக மாம்பழத்தை விளைவித்துள்ளேன். ஆனால் எனக்கு சந்தையில் உரிய லாபம் கிடைக்கவில்லை" என்று வேதனையுடன் கூறியுள்ளார் நாகப்பா. அரிய வகை பயிர்களை சிரமப்பட்டு விளைவிக்கும் விவசாயிகளுக்கு அரசு மார்க்கெட்டிங் மற்றும் ஏற்றுமதிக்கான உரிய உதவிகளை செய்ய வேண்டும் என்பதே நாகப்பாவை போன்ற விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது.


Click it and Unblock the Notifications