பெங்களூரு: கர்நாடக அரசு அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு எலக்ட்ரிக் வாகன கொள்கையை கொண்டு வருவதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிஎன்பிசி டிவி18 வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கர்நாடகா அரசு 25 லட்சம் ரூபாய்க்கு கீழ் இருக்கும் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கான சாலை வரிகளை ரத்து செய்ய திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் கர்நாடக அரசு எலக்ட்ரிக் வாகன போக்குவரத்து பிரிவில் மட்டும் 2029ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த துறை சார்ந்த இயங்கக்கூடிய நிறுவனங்களுக்கு 50 சதவீதம் வரை நிதி உதவி வழங்க முடிவு செய்திருப்பதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எலக்ட்ரிக் வாகன பிரிவில் கர்நாடகாவில் இருக்கும் திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படுவது அல்லது புதிய திட்டங்களை நிறுவும்போது தயாரிப்புடன் இணைக்கப்பட்ட நிதி உதவி வழங்குவதற்கு கர்நாடகா அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நிறுவனங்களுக்கு 15 முதல் 25 சதவீதம் வரை மூலதன முதலீட்டு மானியம் மற்றும் வரிவிலக்கு ஆகியவற்றை வழங்குவதற்கு கர்நாடக அரசு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் கர்நாடகாவில் அமைய இருந்த ஓலா மற்றும் ஏத்தர் எலக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி ஆலைகள் தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து விட்டன.
எனவே எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களை ஈர்க்கும் பொருட்டு கர்நாடக அரசு புதிதாக எலக்ட்ரிக் வாகன கொள்கையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே பல்வேறு நிறுவனங்களோடு கர்நாடக மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்களின் கருத்துக்களின் படி புதிதாக கொள்கைகள் உருவாக்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
நிலம், மானியத்தில் எலக்ட்ரிக் தண்ணீர் உள்ளிட்டவை வழங்குவதற்கு கர்நாடக அரசு இந்த நிறுவனங்களுக்கு தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளார். ஆய்வு மற்றும் மேம்பாடுகளுக்கு தேவையான மையங்களை அமைப்பது, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்க கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். புதிய எலக்ட்ரிக் கொள்கை அமலுக்கு வரும்போது பல்வேறு எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களும் கர்நாடகாவை நோக்கி படையெடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications