கர்நாடகாவில் மீண்டும் பீர் விலை உயர வாய்ப்புள்ளது. 2023-ஆம் ஆண்டில் ஏற்பட்ட விலை உயர்வைத் தொடர்ந்து, அரசு மீண்டும் வரியை உயர்த்த திட்டமிட்டு வருகிறது. இதனால் மது அருந்தும் நுகர்வோர் கவலை அடைந்துள்ளனர். முதற்கட்டமாக 2023-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக மாநில பட்ஜெட்டில் பீர் விலை 10 சதவீதம் அதிகரித்தது. இதனால் 650 மில்லி பாட்டில் ரூ. 10 முதல் ரூ. 15 வரை அதிகரித்தது. பிப்ரவரி 2024-ஆம் ஆண்டில் அம்மாநில அரசு மீண்டும் பீர் விலையை 10 சதவீதம் அதிகரித்தது. இந்த இரண்டாவது விலை உயர்வின் காரணமாக ஒரு பாட்டில் விலை 15 ரூபாய் வரை உயர்ந்தது.
கூடுதலாக சித்தராமையா தலைமையிலான அரசாங்கமாக 2024-ஆம் ஆண்டு ஸ்ட்ராங் பீர் மீதான கலால் வரியை உயர்த்த முன்மொழிந்தது. ஒருவேளை இந்த உயர்வை அங்கீகரிக்கப்பட்டால் ஒரு வருடத்திற்குள் மூன்றாவது முறையாக பீர் விலை உயர வாய்ப்புள்ளது.

தற்போது பீர் பிரியர்களுக்கான ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் இதுவரையில் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. பீர் விலை உயர்வு தொடர்பான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த விலை உயர்வு தொடர்பாக ஜனவரி 9-ஆம் தேதி அன்று பேச்சுவார்த்தை நடந்ததாக அமைச்சர் ஆர்.பி. திம்மாபூர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. "'பீர் தவிர பிற மதுபானங்களின் விலையை உயர்த்த நாங்கள் தற்போது திட்டமிடவில்லை. ஆனால் பீருக்கான விலை உயர்வு குறித்து பரிசீலித்து வருகிறோம். மேலும் இறுதி முடிவு குறித்தும் முதலமைச்சருடன் இன்னும் விவாதிக்கவில்லை",என்று திம்மாபூர் விளக்கமளித்துள்ளார்
இந்திய மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் விலை உயர்வு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். புதிய லேபிளிங் விதிகள் மற்றும் கடுமையான விலை உயர்வு ஆகியவை பீர் தொழிலுக்கு தீங்கு விளைவிக்கும், அதோடு மாநிலத்தின் வருவாயை குறைக்கும் என்று மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. நுகர்வோர் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து மேற்கோள் காட்டி, அரசாங்கம் இந்த விலை உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
கர்நாடகாவின் பீர் சந்தையில் 90% ஸ்ட்ராங் பீருக்கான தேவை இருக்கிறது. எனவே தற்போது முன்மொழியப்பட்டுள்ள கலால் வரி அதிகரித்தால், அது பீரின் விலையை கணிசமாக உயர்த்த வழிவகுக்கும். ஸ்ட்ராங் பீர் மீதான கலால் வரி உயர்ந்தால் லிட்டருக்கு ரூ.20 அதிகரிக்கும் என்றும், பீருக்கான குறைந்தபட்ச கேஸ் விலை ரூ.300-ஆக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை கர்நாடகாவில் பீர் விலையை இந்தியாவிலேயே மிக உயர்ந்ததாக மாற்றக்கூடும். இதனால் ஒரு பாட்டிலின் விலை ரூ. 95 முதல் ரூ. 140 வரை உயரலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே, அரசு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, தொழில் வளர்ச்சி மற்றும் நுகர்வோர் நலன் கருதி சிறந்த தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்று மதுபான உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications