கர்நாடக மாநிலத்தில் அரசுக்கு சொந்தமாக மொத்தம் 1.40 கோடி ஏக்கர் நிலம் உள்ளதாக லேண்டுபீட் மொபைல் சாப்ட்வேர் (Landbeat mobile software) மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை முதல்வர் சித்தராமையா சட்டமன்றத்தில் அமைச்சர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதில் 14.32 லட்சம் ஏக்கர் நிலத்தை ஆய்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டது. கிராம அக்கவுன்டன்ட்கள் மூலம் இதுவரை 10.78 லட்சம் ஏக்கர் நிலம் ஆய்வு செய்யப்பட்டு விட்டது. மொத்த நிலத்தில் 1.93 லட்சம் ஏக்கர் நிலம் வருவாய்த் துறைக்கு சொந்தமாக உள்ளது.

மேலும் 20 துறைகளுக்குச் சொந்தமான 91,000 நிலப் பரப்புகள் பலவகைகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகள் மீது ஆகஸ்ட் மாதம் முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இதனிடையே வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கூறுகையில், மற்ற துறைகளும் தங்களது நிலம் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. அந்த நிலங்கள் அரசு வசம் இருக்கிறதா அல்லது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்படுகின்றது.
பல்வேறு துறைகளின் நிலத்தை பாதுகாப்பதற்காக எஸ்டேட் ஆபிஸர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆர்டிசியில் துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தின் விவரம் தெரிவிக்கப்படும்.
நில விற்பனையில் மோசடியைத் தவிர்க்க ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பிரசாரம் செய்யப்படும். நில மோசடி தொடர்பாக ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. 737 சர்வேயர்கள் பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது, விரைவில் அவை நிரப்பப்படும்.
அனைத்து நில ஆவனங்களும் ஸ்கேன் செய்யப்பட்டு இண்டக்ஸ், டிஜிட்டலைஸ் செய்யப்பட்டு்ள்ளது. பூ சுரக்ஷா திட்டத்தின்படி இது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 3.28 கோடி பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. 31 தாலுகாக்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட்டுக்குள் அனைத்து தாலுகாக்களிலும் செயல்படுத்தப்பட்டு விடும்.
அனைத்து நில ஆவணங்களையும் ஓராண்டுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும். இதனால் ஆவணங்கள் சேதமடைதல், திருடுபோதல் போன்றவை தடுக்கப்படும். நில ஆவணங்களை பொதுமக்கள் எளிதாக பெறுவதற்கு இது உதவும் என்றார் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications