பெங்களூரு: தொழில் ரீதியாக பெங்களூரு நகரம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தை போன்றே பெங்களூருவுக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்தது.
தற்போது இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருக்கும் கர்நாடக மாநில அரசு அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளை துரிதப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பாக கர்நாடக மாநில எல்லையில் இருக்கும் ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றன.

இது பெங்களூரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைகிறது என்பதால் கர்நாடக மாநில அரசு பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.
முதல் கட்டமாக ஐடிஈசி என்ற நிறுவனத்தின் மூலம் விமான நிலையத்தை கட்டமைப்பதற்கு பொருத்தமான ஏழு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கே விரிவான ஆய்வு நடத்தப்பட்டது .ஆனால் இடைத்தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா ,ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல்கள், அமைச்சர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஆகியவை காரணமாக இந்த பணி அப்படியே நின்று போனது .
தற்போது இந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் அரசு விமான நிலையத்தை கட்டமைக்கும் இடத்தை தேர்வு செய்யும் பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விமான நிலையத்தை நிறுவுவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கான பணி இறுதிக்கட்டத்தில் இருப்பதாக உள்கட்டமைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்கட்ட அமைப்பு துறை அமைச்சர் எம் பி பாட்டில் சார்பாக விரிவான திட்ட அறிக்கை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரத்திலேயே அது நடந்துவிடும் என்கின்றனர் அதிகாரிகள்.
முன்னதாக ஆகஸ்ட் மாதத்திலேயே கர்நாடக மாநில அரசு சார்பாக ஏழு இடங்கள் விமான நிலையத்தை கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டன. ஆனால் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தன்னுடைய தொகுதிக்கு அருகிலேயே இந்த விமான நிலையம் அமைய வேண்டும் என கூறினார் , அதேபோல துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரும் ராமநகரா பகுதியில் விமான நிலையம் அமைய வேண்டும் என பரிந்துரை செய்தார். இவ்வாறு அமைச்சர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவியதால் விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தாமதம் அடைந்தது.
இதனிடையே கெம்பெகோடா சர்வதேச விமான நிலையத்திற்கு நிகரான வசதிகள் கொண்ட வகையில் கேஎஸ்ஆர் பெங்களூர் ரயில்வே நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 1500 கோடி ரூபாயை கர்நாடகா அரசு செலவிட இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த வசதிகள் கொண்ட ரயில் நிலையமாக இதனை மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில அரசு கூறுகிறது.


Click it and Unblock the Notifications