சென்னை: கர்நாடகா மாநில அரசு மதுபான விலையை இன்று முதல் குறைக்க முடிவு செய்துள்ளது. வரி வருவாயை அதிகரிப்பதுடன், கர்நாடக மாநிலத்தில் மதுபான விலை அண்டை மாநிலங்களை விட அதிகமாக இருப்பதையும் சரிசெய்யும் வகையில் முக்கியமான மதுபான வகைகள் மீது கலால் வரியைக் கர்நாடகா மாநில அரசு குறைத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மதுபான விலையைக் குறைக்க முதலமைச்சர் கலால் துறைக்கு அறிவுறுத்தியதை தொடர்ந்து, ஜூலை 1 முதல் விலையைக் குறைப்பதற்கான முந்தைய திட்டங்கள் தீட்டப்பட்டது. ஆனால் மதுபான உற்பத்தியாளர்களுக்கும் கலால் துறைக்கும் இடையிலான பேச்சுவார்த்தை காரணமாக தடைப்பட்டதையடுத்து இன்று விலை குறைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் புதிய கலால் வரி விபரம் வெளியிடப்பட்டது.

கடந்த மூன்று மாதங்களாக ரீடைல் மதுபான கடையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம் (IMFL) பற்றாக்குறை நிலவியது முக்கிய பிரச்சனையாக இருந்தது. அரசு திருத்திய வரி விகிதங்களை வெளியிட்ட பிறகு இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக அரசு மதுபானம் மீதான கலால் வரி விகிதங்களைத் திருத்தத் திட்டமிட்டதால், மதுபான உற்பத்தி ஆலைகள் இடையே குழப்பம் ஏற்பட்டு உற்பத்தி தற்காலிகமாகக் குறைத்தும், நிறுத்தியும் வைக்கப்பட்டது. இதற்கு முன் கொண்டுவரப்பட்ட வரி விதிப்புகள் படி உற்பத்திக்கு முன் வரி செலுத்த வேண்டியதால், உற்பத்தியாளர்கள் அதிகம் உற்பத்தி செய்யத் தயக்கம் காட்டினர்.
ஏனென்றால் வரி குறைந்தால் அதிக விலையில் உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்க வேண்டியிருக்கும், இதனால் நஷ்டம் ஏற்படும் என்ற நிலை இருந்தது. கர்நாடக அரசு இறுதியாக புதிய வரி விகிதங்களை வெளியிட்ட பிறகு இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டது.
மேலும் கர்நாடகா மாநிலத்தை ஒட்டியுள்ள பிற மாநிலங்களில் மதுபான விலை குறைவாக இருக்கும் காரணத்தால் எல்லைப் பகுதியில் இருக்கும் மக்கள் மலிவான மதுபானத்தை வாங்க மற்ற மாநிலங்களுக்குச் செல்வதால், கர்நாடகா மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதால் இந்த கலால் வரி குறைப்பு மூலம் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இதனைச் சரி செய்யக் கர்நாடக அரசு சுமார் 16 வெவ்வேறு பிரிவுகளில் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
கர்நாடகா அரசு, இன்று முதல் பிரீமியம் மதுபானங்களுக்கான விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்கக் குறைப்பு, உயர் ரக பிராண்டு மதுபானங்கள் மலிவு விலையில் கிடைக்கச் செய்வதோடு, அண்டை மாநிலங்களிடம் இழக்கும் வருவாய் இழப்பைக் காப்பாற்றப்படும்.
முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் பிராந்தி, விஸ்கி, ஜின் மற்றும் ரம் உள்ளிட்ட பிரீமியம் மதுபானங்களின் விலை கணிசமாக அதிகரித்தது தான் அனைத்து பிரச்சனைக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த விலை குறைப்பு முதலில் ஜூலை 1 செயல்படுத்தப்படத் திட்டமிட்டாலும் பல காரணங்களால் ஏற்பட்ட தாமதம் காரணமாக புதிய விலைகள் தற்போது தான் நடைமுறைக்கு வருகின்றன.


Click it and Unblock the Notifications