இந்தியாவின் சிலிகான் வேலி என செல்லமாக அழைக்கப்படும் பெங்களூர், பல துறையில் வேகமாக வளர்ந்தாலும் மொத்த கர்நாடகாவும் பெங்களூரை மட்டுமே நம்பி தனது பொருளாதார சக்கரத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறது. இப்படியிருக்கையில் தமிழ்நாடு, சென்னையை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதைத் தீவிரமாக நம்பிய காரணத்தால் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி என பல மாவட்டங்கள் தொடர்ந்து புதிய முதலீடுகளை ஈர்த்து மாஸ் காட்டி வருகிறது.
இந்த கட்டமைப்பு பிற மாநிலங்கள் பொறாமைப்படும் அளவுக்கு இருக்கும் காரணத்தால், இதேபோன்ற கட்டமைப்பை தங்கள் மாநிலத்திலும் உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் களத்தில் இறங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் பாதையில் பயணிக்க கர்நாடக முடிவு செய்து 4-5 பெங்களூர் உருவாகப் போவதாகத் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில், பெங்களூர் சிலிகான் வேலி போல 4-5 பகுதிகளை உருவாக்க அரசு விரும்புகிறது என்று அம்மாநில மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பயோடெக்னாலஜி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். IT துறையின் தலையாய அமைப்பான நாஸ்காம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய கார்கே, கர்நாடகாவை முதலீட்டு இலக்காக மட்டுமல்லாமல், அறிவு மற்றும் திறன்களுக்கான இடமாகவும் உருவாக்க கர்நாடக அரசு விரும்புவதாகத் தெரிவித்தார்.
நாஸ்காம் தலைவர் டெப்ஜானி கோஷ் உடன் புதன்கிழமை நடைபெற்ற வடிவமைப்பு மற்றும் பொறியியல் மாநாடு 2024 இல் கலந்துகொண்டு பேசினார் பிரியங்க் கார்கே. கர்நாடகாவில், பெங்களூர் சிலிகான் வேலி போல 4-5 பகுதிகளை உருவாக்குவது மூலம் நாட்டிலும் கர்நாடகா மாநிலம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகளவில் புதுமைக்கான இடமாக மாறும் எனத் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து X தளத்தில் பிரியங்க் கார்கே செய்த பதிவில், கர்நாடகா உலகின் நான்காவது மிகப்பெரிய டெக்னாலஜி கிளஸ்டர் மற்றும் இந்திய அளவில் பல துறையில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது என்று தெரிவித்தார். இந்தியாவில் தொழில்நுட்ப திறமையில் மூன்றில் ஒரு பகுதியையும், 25,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும், 52 யூனிகார்ன் நிறுவனங்களையும், 47 விரைவில் யூனிகார்ன் நிலையை அடையும் நிறுவனங்களையும் கொண்டு உள்ளது என பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
இந்தியா செயற்கை நுண்ணறிவு திறன் தொழில்நுட்ப வல்லுனர்கள் மத்தியில் பரவுவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது, அமெரிக்கா மற்றும் ஜெர்மனிக்குப் பின்னால் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications