கர்நாடக மாநிலத்தில் தனியார் துறையில் உள்ள நிறுவனங்கள் நியமிக்கும் ஊழியர்களில் உள்ளூர் மக்களுக்கு அதிகப்படியான ஒதுக்கீடு செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் தலையாய சங்கமான நாஸ்காம் வலியுறுத்தியுள்ளது.
இந்த மசோதாவால் கர்நாடகாவில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என நாஸ்காம் எச்சரித்துள்ளது.

ஜூலை 15-ஆம் தேதி கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு மசோதா ஒப்புதல் பெற்றது. இதன்படி, தனியார் நிறுவனங்களில் நிர்வாக பதவிகளில் இருக்கும் பணியிடங்களில் 50 சதவீதமும், நிர்வாக பதவிகள் அல்லாத பணியிடங்களில் 75 சதவீத வேலைவாய்ப்புகளை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று இந்த மசோதா கூறுகிறது.
இந்த கட்டுப்பாடுகள் காரணமாகத் திறமையான உள்ளூர் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு, நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று நாஸ்காம் எச்சரித்துள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவிகிதம் தகவல் தொழில்நுட்ப துறை பங்களிக்கிறது.
இதேபோல் நாட்டின் மொத்த டெக் ஊழியர்களில் கால்பகுதியினர் கர்நாடக மாநிலத்தில் உள்ளனர். மேலும் கர்நாடக மாநிலத்தில் சுமார் 11,000-க்கும் அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் மொத்த இந்திய GCC-களில் 30 சதவிகிதம் பெங்களூரில் செயல்படுகின்றன என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.
இத்தகையை சூழ்நிலையில் இப்புதிய வேலைவாய்ப்பு மசோதா என்பது கர்நாடக மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடையாக இருப்பது மட்டும் அல்லாமல் தற்போது செயல்படும் நிறுவனங்களை நகரத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு வருவாயில் பெரும் பாதிப்பை ஏற்படக்கூடும்.
இதேபோல இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் உலகளாவிய நிறுவனங்கள் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் இந்த மசோதா பெரும் தடையாக இருக்கும் என்றும் நாஸ்காம் எச்சரித்துள்ளது. இந்த மசோதா-வால் புதிதாக முதலீடு செய்யவோரும் கர்நாடக மாநிலத்தை ஒதுக்கிவைக்க கூடும் நிலை உருவாகும் என நாஸ்காம் எச்சரித்துள்ளது.


Click it and Unblock the Notifications