கர்நாடகாவில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறது. 12ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு 14ஆம் தேதி (நாளை) வரை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை செய்த பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. கர்நாடக மாநில அரசு பல்வேறு நிறுவனங்களோடு பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் இயக்குனரான சஜன் ஜிண்டால் கர்நாடக மாநிலத்தில் புதிதாக 1லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்து தங்களுடைய உற்பத்தியை பெருக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதில் 43 ,000 கோடி ரூபாய் ஏற்கனவே விஜய் நகர் பகுதியில் இருக்கும் தங்களுடைய ஸ்டீல் உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய பயன்படுத்தப்படும் என கூறினார்.
மேலும் 56 ,000 கோடி ரூபாயை சூரிய சக்தி மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி, பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்தார் . அதே வேலையில் டாட்டா பவர் ரினிவபில் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் 50,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில் இந்த முதலீடுகள் அனைத்தும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல ரிவ்யூ பவர் என்ற நிறுவனம் 50,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின்சார உற்பத்தி மையத்தை நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளது. செரண்டிகா இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 43,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதேபோல பல்டோடா ஸ்டீல் நிறுவனம் 54,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஸ்டீல் உற்பத்தி ஆலையை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது. மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா கர்நாடகாவில் அடுத்த சில ஆண்டுகளில் தங்கள் நிறுவனம் 40, 000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் சுமார் 8000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறினார்.

சுற்றுலா துறையில் மகேந்திரா ஹாலிடேஸ் நிறுவனம் கர்நாடகாவில் தொடர்ந்து தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஹம்பி பகுதியில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் தங்குமிடங்களை நிறுவ இருப்பதாக கூறியுள்ளார்.
ஹூரோ நிறுவனம் 22,000 கோடி முதலீடு செய்து பசுமை ஹைட்ரஜன் திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. சஸ்லான் எனர்ஜி நிறுவனம் 21,950 கோடி ரூபாய் முதலீட்டில் காற்றாலை மின் உற்பத்தி மேற்கொள்ள இருப்பதாக ஒப்பந்தம் செய்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, ஹோண்டா, ஷீண்டர் எலக்ட்ரிக், ஹிடாச்சி எனர்ஜி, டால்மியா சிமெண்ட், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களும் கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications