பெங்களூரு, கர்நாடகா: திரையரங்குகளில் மக்களின் மிக முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக இருக்கின்றன. வார இறுதி நாட்களில் தங்களுடைய பணி அழுத்தங்களிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக மக்கள் திரையரங்குக்கு சென்று சினிமா பார்க்கின்றனர். இந்த சினிமாவிற்கான கட்டணம் என்பது ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு மாதிரியாக வசூல் செய்யப்படுகிறது.
சினிமா கட்டணம்: அதுவும் வார நாட்களில் ஒரு கட்டணம், வார இறுதி நாட்களில் ஒரு கட்டணம், புதிதாக படங்கள் திரைக்கு வரக்கூடிய நாட்களில் ஒரு கட்டணம் என வசூல் செய்யப்படுகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கர்நாடக மாநில அரசு ஒரு நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. கர்நாடக மாநில அரசு கூடிய விரைவில் ஒரு சட்டத்தை கொண்டு வர இருக்கிறது.

ரூ.200 தான் கட்டணம்: இதன்படி அனைத்து திரையரங்குகளிலும் சினிமா டிக்கெட் உச்சவரம்பு 200 ரூபாய் மட்டுமே என விரைவில் சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது பொதுமக்களின் கருத்துக்காக பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் அனைத்து மொழி படங்களுக்கான மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து விதமான தியேட்டர்களிலும் பொழுதுபோக்கு வரி உட்பட அனைத்தும் சேர்த்து 200 ரூபாய்க்குள் தான் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
15 நாட்கள் கருத்து கேட்பு: அடுத்த 15 நாட்களுக்குள் பொதுமக்கள் இதன் மீது கருத்து தெரிவிக்க வேண்டும், இதனை அடுத்து அனைத்து தரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்து அரசு இதனை சட்டமாக கொண்டு வரும். பெங்களூரு நகரில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் வேலை செய்கின்றனர். இதனால் பல மொழி திரைப்படங்களை வெளியிடக்கூடிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது.

அதிக கட்டணம்: பெங்களூரில் செயல்படக்கூடிய தியேட்டர்களில் வார நாட்களில் ஒரு கட்டணம் வார இறுதி நாட்களில் ஒரு கட்டணம் என அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. குறிப்பாக imax உள்ளிட்ட தியேட்டர்களில் ஒரு திரைப்படத்திற்கு 600 ரூபாய் முதல் 1000 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தான் கர்நாடக மாநில அரசு 200 ரூபாய் தான் டிக்கெட் கட்டணம் என்ற ஒரு நடைமுறையை கொண்டு வர இருக்கிறது.
பிவிஆர்-ஐநாக்ஸ் நிறுவனத்துக்கு சிக்கல்: இது கர்நாடகாவில் செயல்படக்கூடிய பல்வேறு திரையரங்குகளுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான வருமானம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தான் வருகிறது .பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் 1743 திரையரங்குகளில் 215 திரையரங்குகள் கர்நாடகாவில் தான் அமைந்திருக்கின்றன . பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் பெங்களூருவில் சராசரியாக 260 ரூபாயை டிக்கெட் கட்டணமாக வசூல் செய்கிறது.
30% வரை குறையும் டிக்கெட்: தற்போது அரசு 200 ரூபாய் தான் டிக்கெட் என்ற சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் இந்த நிறுவனம் தற்போது வசூல் செய்யும் டிக்கெட் கட்டணத்திலிருந்து 30% குறைத்து தான் வசூல் செய்ய முடியும். இது நிறுவனத்தின் வருமானத்தில் 2.2 சதவீதம் வரை குறைவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை அடுத்து பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜூலை 16ஆம் தேதி 1.14 சதவீதம் குறைந்து 978 ரூபாய் என வர்த்தகமானது.


Click it and Unblock the Notifications