பெங்களூரு: இந்தியாவில் ஸ்விக்கி, ஸெப்டோ உள்ளிட்ட உணவு மற்றும் மளிகை சாமான் டெலிவரி செய்யும் தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப இவை லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளன. இவ்வாறு டெலிவரி பணிகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஓலா, ஊபர் உள்ளிட்டவற்றில் ஓட்டுநர்களாக பணிபுரிபவர்கள் கிக் பணியாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
உணவு விநியோகம், டாக்ஸி சேவை உள்ளிட்டவற்றில் பணியாற்றும் கிக் பணியாளர்கள் எண்ணிக்கை 2030ஆம் ஆண்டுக்குள் 23.5 மில்லியன் என உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதே கிட்டதட்ட 70 லட்சத்திற்கும் மேல் கிக் பணியாளர்கள் இருந்தாலும் அவர்கள் முறைசாரா பணியாளர்களாகவே இருக்கின்றனர்.

இந்நிலையில் கர்நாடகா அரசு கிக் பணியாளர்களின் நலனுக்காக செஸ் வரி வசூலிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. ஸோமேட்டோ, ஊபர், ஸ்விக்கி உள்ளிட்ட தளங்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு செஸ் வரி விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த துறைகளில் பணியாற்றும் கிக் பணியாளர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு கிடைக்கும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகா தொழில்துறை அமைச்சரான சந்தோஷ் லாட் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது கிக் பணியாளர்கள் பெருமளவில் பணியாற்றக்கூடிய ஸோமேட்டோ உள்ளிட்ட தளங்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு செஸ் வரி விதிக்கப்படும் என கூறினார்.
இந்த கட்டணமானது கிக் பணியாளர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என கூறினார். பொதுமக்கள் வாங்கும் பொருட்கள் மீது வரி விதிக்கவில்லை அந்த பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு டிரான்ஸ்போர்ட் செய்வதற்காக மட்டுமே இந்த செஸ் வரியானது விதிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
ஏனெனில் இதுபோன்ற கிக் பணியாளர்கள் சாலை விபத்துகளை சந்திப்பதற்கான ஆபத்தில் உள்ளனர் , அதிக நேரம் சாலையிலேயே நேரத்தை கழிப்பதால் மாசடைந்த காற்றை சுவாசிக்க நேரிடுகிறது இதனால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் செஸ் வரியானது இதுபோன்ற டெலிவரி வேலையில் இருக்கும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கவும் அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவி வழங்கவும் பயன்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே கர்நாடக மாநில அரசு இதுபோன்ற செயலிகளில் வேலையில் இருக்கும் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக ஒரு மசோதாவை தயாரித்துள்ளது. இந்த மசோதா டிசம்பர் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என சொல்லப்படுகிறது. முன்னதாக கிக் பணியாளர்களின் கூட்டமைப்பினர் மத்திய தொழில் துறை அமைச்சரை சந்தித்தனர்.
அப்போது இவர்களுக்கு மருத்துவ காப்பீடு ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Written by: Devika


Click it and Unblock the Notifications